ராம்நாத் கோவிந்த் சுயசரிதை வெளியீட்டில் பிரதமர் மோடி உருக்கம்: தாய் இல்லாத வெற்றிடத்தை இப்போதும் உணர்கிறேன்
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் எழுதியுள்ள ‘இந்தியக் குடியரசின் வெற்றி: என் வாழ்க்கை, என் போராட்டங்கள்’ என்ற சுயசரிதை நூல் வெளியீட்டு விழா டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்றது. இந்த விழாவில் புத்தகத்தை வெளியிட்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ராம்நாத் கோவிந்தின் வாழ்க்கை மற்றும் போராட்டங்கள் குறித்து பல்வேறு கருத்துகளை பகிர்ந்துகொண்டார்.
ராம்நாத் கோவிந்தின் சுயசரிதையை வெளியிடுவதில் பெருமிதம் கொள்வதாக தெரிவித்த பிரதமர் மோடி, இந்த நூல் இந்திய ஜனநாயகத்தின் பாரம்பரிய அடையாளமாக மாறும் என்று கூறினார். எதிர்கால தலைமுறையினர் கற்றுக்கொள்ள வேண்டிய பல்வேறு விஷயங்கள் இந்த சுயசரிதையில் இடம்பெற்றுள்ளதாகவும், குறிப்பாக இளைஞர்கள் இதனை படித்து வாழ்க்கைக்கான பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தற்போதைய காலகட்டம் சமூக ஊடகங்களும் ‘ரீல்ஸ்’களும் அதிகம் தாக்கம் செலுத்தும் காலமாக இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். சமூக ஊடக பிரபலங்கள் இளைஞர்களின் கவனத்தை வேறு திசைகளுக்கு திருப்பக்கூடும் என்றும், வாழ்க்கையில் குறுக்கு வழியை தேடுவதற்கு பதிலாக சுயசரிதைகளை படித்து வெற்றி பெற்றவர்களின் போராட்டங்களில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் ராம்நாத் கோவிந்த் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். இந்திய ஜனநாயகத்தில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் நோக்கில் ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டத்திற்காக அவர் தீவிரமாக பணியாற்றி வருவதாகவும், இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் தொடர்ந்து தனது பங்களிப்பை வழங்கி வருவதாகவும் பிரதமர் கூறினார்.
ராம்நாத் கோவிந்தின் சுயசரிதையை இளைஞர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். அந்த நூலில் ராம்நாத் கோவிந்த் தனது தாயார் குறித்து குறிப்பிட்டுள்ள சம்பவங்களையும் அவர் நினைவுகூர்ந்தார். வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் அவரது தாயார் உயிரிழந்தது தொடர்பான தகவல்கள் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாகவும், அந்த இழப்பின் வலியை தன்னால் உணர முடிவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
தனது தாயார் 100 வயது வரை வாழ்ந்து தன்னை ஆசீர்வதித்துச் சென்றது தனது அதிர்ஷ்டம் என்று கூறிய பிரதமர் மோடி, இருந்தபோதிலும் தற்போது தாய் இல்லாத வெற்றிடத்தை ஆழமாக உணர்வதாக உருக்கமாக தெரிவித்தார். தாயின் இழப்பு ஏற்படுத்தும் வலியை ராம்நாத் கோவிந்தின் வாழ்க்கைச் சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி பிரதமர் தனது உணர்வுகளை பகிர்ந்துகொண்டார்.
மேலும், ஒருவரின் மன உறுதியும் விடாமுயற்சியும் கடினமான சூழ்நிலைகளை கடந்து வாழ்க்கையில் உயர்வதற்கு எவ்வாறு உதவுகின்றன என்பதற்கு ராம்நாத் கோவிந்தின் வாழ்க்கை சிறந்த எடுத்துக்காட்டு என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். சாதாரண பின்னணியில் இருந்து நாட்டின் உயரிய அரசியலமைப்புப் பதவியான குடியரசுத் தலைவர் பதவிக்கு அவர் உயர்ந்த விதம், இளைஞர்களுக்கு முக்கியமான வாழ்க்கைப் பாடத்தை வழங்குவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.



