முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பணம் சிக்கிய விவகாரம்: விசாரணைக் குழு பரபரப்பு
டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கணக்கில் வராததாக கூறப்படும் பெருமளவிலான பணம் சிக்கிய விவகாரத்தில், அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக மக்களவை விசாரணைக் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், அவரை பதவியில் இருந்து நீக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2025-ம் ஆண்டு மார்ச் 14-ம் தேதி டெல்லியில் உள்ள நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அவர் வீட்டில் இல்லாத நிலையில், தீயை அணைக்க சென்ற தீயணைப்புத் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள், பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் எரிந்த நிலையில் ஏராளமான ரூ.500 நோட்டுக் கட்டுகள் கிடந்ததை கண்டுபிடித்தனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், முதற்கட்ட விசாரணையில் அந்த அறை தனது கட்டுப்பாட்டில் இல்லை என்று நீதிபதி வர்மா தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர், அவரது உதவியாளர்கள் முன்னிலையில் அந்த அறை சுத்தம் செய்யப்பட்டதாகவும், அங்கு இருந்த பணம் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டது.
விவகாரத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு விரிவான விசாரணை தேவை என அப்போதைய டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் முதற்கட்ட அறிக்கையை சமர்ப்பித்தார். இதற்கிடையே நீதிபதி வர்மா அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, 2025-ம் ஆண்டு மார்ச் 22-ம் தேதி அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, 3 உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய விசாரணைக் குழுவை அமைத்தார். இந்தக் குழு பல்வேறு சாட்சிகளிடம் விசாரணை மேற்கொண்டு, அதே ஆண்டு மே மாதத்தில் தனது அறிக்கையை சமர்ப்பித்தது.
அந்த அறிக்கையில், பணம் கண்டெடுக்கப்பட்ட அறை நீதிபதி வர்மாவின் கட்டுப்பாட்டிலேயே இருந்ததாகவும், அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் உண்மை இருப்பதாகவும் குழு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை பதவி நீக்கம் செய்யக் கோரி 2025-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மக்களவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு பின்னர் நீதிபதி வர்மா மீது குற்றப்பத்திரிகை தயாரித்தது. இதற்கிடையில், கடந்த ஏப்ரல் 10-ம் தேதி நீதிபதி வர்மா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
விசாரணைக் குழுவின் நடவடிக்கையை எதிர்த்து நீதிபதி வர்மா உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால், அந்த மனு உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. தொடர்ந்து டெல்லி காவல் துறை, சிஆர்பிஎஃப் மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகளிடம் மார்ச் 13 முதல் 17-ம் தேதி வரை விசாரணை நடத்தப்பட்டு, அவர்களது சாட்சியங்களும் பதிவு செய்யப்பட்டன.
இந்த விசாரணைகளின் தொடர்ச்சியாக, இரண்டு தொகுதிகளைக் கொண்ட முழுமையான அறிக்கையை விசாரணைக் குழு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் நேற்று சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பணம் அவருக்குச் சொந்தமானது என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக குழு தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என விசாரணைக் குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிக்கை நீதித்துறை மற்றும் நாடாளுமன்ற வட்டாரங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.



