நீட் வினாத்தாள் கசிவு வழக்கு: பிவால் சகோதரர்களின் ஜாமீன் மனுக்கள் இன்று விரைவு நீதிமன்றத்தில் விசாரணை
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தினேஷ் பிவால் மற்றும் விகாஸ் பிவால் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் இன்று சிறப்பு விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன.
நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு விரைவாக தண்டனை வழங்கும் வகையில் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜூலை 23-ம் தேதி தெரிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக, பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) சட்டம், 2024-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விசாரிக்க டெல்லியில் சிறப்பு விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டது.
டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு நீதிமன்றம், நீட் உள்ளிட்ட பொதுத்தேர்வு முறைகேடு தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரிக்கும் வகையில் செயல்பட தொடங்கியுள்ளது. நிலுவையில் உள்ள வழக்குகளையும் இந்த நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
டெல்லி உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் அருண் பாரத்வாஜ் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், திஸ் ஹஸாரி நீதிமன்ற மத்தியஸ்த மைய பொறுப்பு நீதிபதியாக இருந்த அனு குரோவர் பாலிகா, இந்த சிறப்பு விரைவு நீதிமன்றத்தின் சிபிஐ சிறப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிவால் சகோதரர்களின் ஜாமீன் மனுக்கள் இன்று விசாரணைக்கு வருகின்றன. சிறப்பு நீதிபதி அனு குரோவர் பாலிகா, ரோஸ் அவென்யூ நீதிமன்ற வளாகத்தில் உள்ள அறை எண் 408-ல் இந்த மனுக்களை விசாரிக்க உள்ளார்.
நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்குகளில் விரைவான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், இந்த ஜாமீன் மனு விசாரணை முக்கியத்துவம் பெற்றுள்ளது.



