இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு உலகிற்கே முன்மாதிரி; நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!
இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் (CII) முக்கிய பிரிவான ‘யங் இந்தியன்ஸ்’ அமைப்பு சார்பில், மதுரையில் ‘எல்லைகளைத் தாண்டிய தொழில்முனைவு’ என்ற தலைப்பில் தேசிய நிதி தொழில்முனைவோர் இரண்டு நாள் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் நிறைவு நாள் அமர்வில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். யங் இந்தியன்ஸ் அமைப்பின் தேசிய தலைவர் அருண் ரத்தோட் இந்த அமர்வுக்குத் தலைமை தாங்கினார்.
மாநாட்டில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “மதுரை 2,500 ஆண்டுகள் தொன்மையான நகரம்; வணிகத்திற்காகத் தொடர்ந்து இயங்கியதால் தான் இது தூங்கா நகரம் என்று அழைக்கப்படுகிறது. தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகமே உள்ளங்கைக்குள் வந்துவிட்ட சூழலில், இளம் தொழில்முனைவோர் அனைத்துத் தடைகளையும் கடந்து தங்களது முயற்சியால் முன்னேற வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். மேலும், பின்தங்கிய மாவட்டங்களை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் விருதுநகர் மற்றும் ராமநாதபுரத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், விருதுநகர் மிளகாய் வத்தல் வணிகத்தை உலகச் சந்தைக்குக் கொண்டு செல்ல அரசு புதிய நிறுவனத்தைத் தொடங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
உலகளாவிய சவால்கள் குறித்துப் பேசிய அமைச்சர், “ரஷ்யா-உக்ரைன் போர், இஸ்ரேல்-ஈரான் பதற்றம், சரக்குக் கப்பல் போக்குவரத்துத் தாமதம், எண்ணெய்-எரிவாயு சிக்கல்கள் மற்றும் உரங்களின் விலை உயர்வு போன்ற பல்வேறு உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும், இந்தியா மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாகத் திகழ்கிறது. இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு சர்வதேச அளவில் ஒரு முன்மாதிரியாக மாறியுள்ளது; குறிப்பாக யுபிஐ (UPI) தளத்தில் மட்டும் மாதத்திற்கு 20 பில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் நடக்கின்றன” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் சாதனைகளைச் சுட்டிக்காட்டிய அவர், பிரான்சில் நடைபெறும் சர்வதேச அணுக்கரு இணைவு ஆராய்ச்சித் திட்டத்தில் (ITER) இந்தியா முக்கியப் பங்கு வகிப்பதாகக் கூறினார். அத்துடன், ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிகா துருவப் பகுதிகளில் இந்தியா ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருவதையும், நிலவின் தென்துருவத்தில் கால்பதித்து இஸ்ரோ முத்திரை பதித்துள்ளதையும் நினைவுகூர்ந்தார். அவசரகால கடன் உத்தரவாதத் திட்டம் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு அரசு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், புதிய தொழில்முனைவோர் தைரியமாகவும் பொறுப்புடனும் செயல்பட்டு, 2047-க்குள் ‘வளர்ந்த இந்தியா’ என்னும் இலக்கை நோக்கி இணைந்து பயணிக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.



