கோவையில் கல்லூரி மாணவர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஒரு மாணவர் கைது
கோவை மாவட்டம் செட்டிபாளையம் காவல் எல்லைக்குட்பட்ட மலுமிச்சம்பட்டியில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு மாணவரை போலீஸார் கைது செய்துள்ளனர். மதுரையைச் சேர்ந்த சந்தோஷ் (20) என்பவரே இன்று (ஆக.13) கைது செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்குவேந்தல் பகுதியைச் சேர்ந்த கென்னடி – சுமதி தம்பதியரின் மகன் அமுதன் (19). இவர் மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 10-ம் தேதி அமுதனும் அவரது நண்பர் ஸ்ரீமனும் கல்லூரி அருகே வந்தபோது, கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்த ஒரு கும்பல் இருவரையும் தனியிடத்துக்கு அழைத்துச் சென்று தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அமுதன், அன்றைய தினம் மதியம் விடுதியில் இருந்தபோது உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் செட்டிபாளையம் போலீஸார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், சக மாணவர்கள் தாக்கியதில் அமுதனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து செட்டிபாளையம் போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.
இந்த வழக்கில் கடலூரைச் சேர்ந்த ஆராமுதன் (20), மானாமதுரையைச் சேர்ந்த அரவிந்த் (21), நீடாமங்கலத்தைச் சேர்ந்த சிவரோகித் (20), குன்னம் பகுதியைச் சேர்ந்த மணிபாலு (20) மற்றும் திருவள்ளூரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரை போலீஸார் நேற்று (ஆக.12) கைது செய்தனர். மேலும் சில மாணவர்களுக்கும் சம்பவத்தில் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்ததால், அவர்களை போலீஸார் தொடர்ந்து தேடி வந்தனர்.
இந்த நிலையில், வழக்கு தொடர்பாக மதுரையைச் சேர்ந்த மாணவர் சந்தோஷ் (20) என்பவரை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர். கல்லூரி விடுதியில் சீனியர் மாணவர்கள் கஞ்சா விற்பனை செய்வது குறித்து தகவல் தெரிவித்ததன் காரணமாகவே மாணவர்கள் குழுவாகச் சேர்ந்து அமுதனை தாக்கிக் கொன்றதாக அவரது பெற்றோர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ஆனால், போலீஸார் தரப்பில் வேறு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரியில் மாணவர்களிடையே அடிக்கடி கோஷ்டி மோதல்கள் நடைபெற்று வந்ததாகவும், அதன் தொடர்ச்சியாக கடந்த 10-ம் தேதி அமுதன் உள்ளிட்ட 6 பேர் ஒத்தக்கால் மண்டபத்தில் தங்கியிருந்த மாணவர் தீபக்கின் அறைக்குச் சென்று அங்கிருந்தவர்களை தாக்கி செல்போனை பறித்ததாகவும் போலீஸார் கூறியுள்ளனர். இதையடுத்து அதே நாளில் எதிர்தரப்பினர் நடத்திய தாக்குதலில் அமுதன் உயிரிழந்ததாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கல்லூரி விடுதியில் தங்கி வகுப்புகளுக்குச் சென்று வந்த அமுதன், கடந்த ஜூலை 11-ம் தேதி விடுதி சமையலரை தாக்கியதாக கூறப்பட்டதையடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். பின்னர் ஒத்தக்கால் மண்டபத்தில் தங்கியிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் சில மாணவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



