ஆழ்வார்திருநகரி தொழிலாளி கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகே தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. மேலும், குற்றவாளிகள் 5 பேருக்கும் தலா ரூ.7,500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி நவலட்சுமிபுரம் நடுத்தெருவைச் சேர்ந்த பிச்சையின் மகன் மாரிமுத்து (33). தொழிலாளியான இவர், அதே பகுதியைச் சேர்ந்த அந்தோணிராஜின் தம்பியான ஏசுராஜாவை அன்றாட வேலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது சம்பள பாக்கி தொடர்பாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு நடந்துள்ளது.
இந்த தகராறு காரணமாக இரு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாரிமுத்துவும், அவரது உறவினர்களும் சேர்ந்து ஏசுராஜாவையும், அவரது அண்ணன் அந்தோணிராஜையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அந்தோணிராஜ், மரியசிலுவை மற்றும் அவர்களது உறவினர்கள் இணைந்து மாரிமுத்துவின் வீட்டை அடித்து உடைத்து, அங்கிருந்த பொருட்களை திருடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்கள் தொடர்பாக இரு தரப்பினர் மீதும் ஆழ்வார்திருநகரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், இரு தரப்பினருக்கும் இடையிலான முன்விரோதம் தொடர்ந்து நீடித்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மாரிமுத்து தனது மனைவியுடன் தனது தந்தை பிச்சையின் வீட்டுக்குச் சென்றுவிட்டு நவலட்சுமிபுரம் நடுத்தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நவலட்சுமிபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த சந்தியப்பன் (50), அவரது மகன் அந்தோணிராஜ் (30), வாய்க்கால்கரை தெருவைச் சேர்ந்த நிக்கோலஸின் மகன் மரியசிலுவை (54), அவரது மகன்கள் அருள்ராஜ் (31), ஞானசேகர் (29), குணசிங் (26) ஆகிய 6 பேரும் சேர்ந்து மாரிமுத்துவை கொலை செய்ததாக வழக்கில் குற்றம்சாட்டப்பட்டது.
இதுகுறித்து ஆழ்வார்திருநகரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான மரியசிலுவை உயிரிழந்தார். இதையடுத்து மீதமுள்ள 5 பேர் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்றது.
வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா, குற்றம்சாட்டப்பட்ட அருள்ராஜ், அந்தோணிராஜ், ஞானசேகர், குணசிங் மற்றும் சந்தியப்பன் ஆகிய 5 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார். இதனைத் தொடர்ந்து 5 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.7,500 அபராதமும் விதித்து நேற்று உத்தரவிட்டார்.



