கடலூர் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி இளைஞர் வெட்டிக்கொலை: போலீஸார் தீவிர விசாரணை
கடலூர் அருகே ரங்கா ரெட்டிப்பாளையம் பகுதியில் நாட்டு வெடிகுண்டுகளை வீசியும், அரிவாளால் தாக்கியும் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால், பாதுகாப்பு நடவடிக்கையாக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் பெரிய காட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சசிகுமார் (31) என்பவர் தனது நண்பர் ராஜாவுடன் ரங்கா ரெட்டிப்பாளையம் பகுதியில் சென்றுகொண்டிருந்தார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் அவர்களை நோக்கி நாட்டு வெடிகுண்டுகளை வீசியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்ற நிலையில், அந்தக் கும்பல் அவர்களை விரட்டிச் சென்றதாக தெரிகிறது.
இந்த தாக்குதலின்போது சசிகுமாரை அந்தக் கும்பல் அரிவாளால் வெட்டியதாகவும், இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. தகவல் கிடைத்ததும் ரெட்டிச்சாவடி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணையை தொடங்கினர். பின்னர் உயிரிழந்த சசிகுமாரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனிடையே தாக்குதலிலிருந்து தப்பிய சசிகுமாரின் நண்பர் ராஜா போலீஸாரிடம் சரணடைந்தார். அவரிடம் சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை சம்பவத்தின் பின்னணி மற்றும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்து தகவல்களை சேகரிக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கடலூர் மற்றும் புதுச்சேரி போலீஸார் இணைந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். சசிகுமார் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டப்பஞ்சாயத்து போன்ற தொழில்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் நிலையில், அவருக்கு ஏற்பட்டிருந்த முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்தால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை கருத்தில் கொண்டு அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.



