வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி ஆன்லைன் மோசடி: தமிழகம் முழுவதும் 205 சைபர் குற்றவாளிகள் கைது
பொதுமக்களின் வங்கிக் கணக்குகளை தவறாகப் பயன்படுத்தி ஆன்லைன் மோசடிகளில் ஈடுபட்டதாக 205 சைபர் குற்றவாளிகளை சென்னை காவல் துறை கைது செய்துள்ளது. தேசிய இணையவழி குற்றப் புகார் பதிவேற்ற தளத்தில் பதிவான புகார்களை அடிப்படையாகக் கொண்டு சென்னை காவல் துறையின் சைபர் குற்றப் பிரிவு நடத்திய தீவிர ஆய்வில் இந்த மோசடி வலையமைப்பு கண்டறியப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு பணம் தருவதாக ஆசை காட்டி அவர்களின் வங்கிக் கணக்குகளைப் பெற்றுக்கொள்ளும் சைபர் குற்றவாளிகள், அந்தக் கணக்குகளை சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளுக்கும் ஆன்லைன் மோசடிகளுக்கும் பயன்படுத்தி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின்பேரில், தமிழகம் முழுவதும் கடந்த 6, 7-ம் தேதிகளில் சைபர் க்ரைம் போலீஸார் ஒருங்கிணைந்த சோதனைகளை மேற்கொண்டனர்.
இந்த சோதனைகளின்போது பல்வேறு வங்கிகளில் செயல்பட்டு வந்த 310 ‘மியூல்’ வங்கிக் கணக்குகள் கண்டறியப்பட்டன. மோசடி நடவடிக்கைகளுக்காக வாடகைக்கு பயன்படுத்தப்படும் வங்கிக் கணக்குகளாகக் கருதப்படும் இவற்றின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணப் பரிவர்த்தனைகளை போலீஸார் விரிவாக ஆய்வு செய்தனர். அதில், இணையவழி மோசடிகளுக்காகவே இந்தக் கணக்குகள் பயன்படுத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருநெல்வேலி உள்ளிட்ட தமிழகத்தின் 25 மாவட்டங்களில் இந்த சோதனை நடவடிக்கைகள் நடைபெற்றன. இந்த மோசடி வலையமைப்புடன் தொடர்புடைய 205 சைபர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, இந்த மோசடி வலையமைப்பின் பின்னணியில் மூளையாக செயல்பட்டவர்கள் யார் என்பது குறித்து சைபர் க்ரைம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தங்களது வங்கிக் கணக்குகளை முன்பின் தெரியாத நபர்கள் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்றும், சிறிய அளவிலான கமிஷன் தொகைக்கு ஆசைப்பட்டு தங்களது பெயரில் உள்ள வங்கிக் கணக்கில் மற்றவர்கள் பணத்தை செலுத்தி எடுக்க அனுமதிப்பது சட்டப்படி குற்றம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.



