உ.பி.யில் டேட்டிங் செயலி மூலம் ஆண்களிடம் ரூ.6 கோடிக்கு மேல் பணம் பறிப்பு: பெண் மீது புகார்
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜைச் சேர்ந்த பல்லவி சிங் ராஜ்புத் என்பவர், டேட்டிங் செயலி மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் ஆண்களுடன் பழகி அவர்களிடம் இருந்து பணம் பறித்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்கறிஞர் ஒருவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, பல்லவி சிங் சமூக வலைதளங்கள் மற்றும் டேட்டிங் செயலிகள் மூலம் ஆண் நண்பர்களை அறிமுகம் செய்து கொள்வதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்களுடன் நெருக்கமாக பழகி, தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொண்டதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நேரில் சந்தித்த பிறகு தனிப்பட்ட முறையில் புகைப்படங்களை எடுத்துக்கொண்டு, அவற்றை பயன்படுத்தி சம்பந்தப்பட்ட ஆண்களை மிரட்டி பணம் பெற்றதாகவும் வழக்கறிஞர் தனது மனுவில் குற்றம்சாட்டியுள்ளார். இதுபோன்று பல ஆண்களிடம் பழகி, இதுவரை ரூ.6 கோடிக்கும் அதிகமான பணத்தை அவர் பறித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட பெண் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து போலீஸார் விசாரணையைத் தொடங்கினர்.
போலீஸார் நடத்திய விசாரணையில், பல்லவி சிங் ராஜ்புத் பொய்யான புகார்களை அளித்து 5 பேரை சிறையில் அடைக்கச் செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது தலைமறைவாக உள்ள பல்லவி சிங் ராஜ்புத், அவருக்கு உதவியதாகக் கூறப்படும் 2 பெண்கள் மற்றும் ஒரு ஆண் ஆகியோரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.



