அனந்தபுரி ரயிலில் ரூ.75 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் திருட்டு: ரயில்வே போலீஸார் தீவிர விசாரணை
சென்னையைச் சேர்ந்த தனியார் நகை நிறுவன மேலாளர் ஒருவர் பயணித்த ரயிலில் இருந்து ரூ.75 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீரங்கம் அருகே நகைகள் இருந்த பை காணாமல் போன நிலையில், ரயில்வே போலீஸார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
வேப்பேரியைச் சேர்ந்த தீபக் சேன்ஷெட்டி (47), தனியார் நகை நிறுவனத்தின் சென்னை கிளை மேலாளராக பணியாற்றி வருகிறார். வாடிக்கையாளர்களிடம் மாதிரி நகைகளை காட்சிப்படுத்தி ஆர்டர்கள் பெறும் பணிக்காக, ரூ.75 லட்சம் மதிப்புள்ள வைர மூக்குத்தி, கம்மல் உள்ளிட்ட நகைகளுடன் கடந்த 22-ஆம் தேதி வந்தே பாரத் ரயிலில் மதுரைக்கு சென்றிருந்தார்.
பணியை முடித்துவிட்டு, 23-ஆம் தேதி இரவு அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை திரும்பியபோது, தனது செல்போன், ஆப்பிள் வாட்ச் மற்றும் தங்க மோதிரத்தையும் நகைகள் இருந்த பைக்குள் வைத்து தூங்கியதாக கூறப்படுகிறது. மறுநாள் காலை விழித்தபோது, நகைகள் அடங்கிய அந்தப் பை காணாமல் போனதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து, ஆப்பிள் வாட்சின் இருப்பிடத்தை அதன் செயலி மூலம் கண்காணித்தபோது, ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் அருகே பை கிடப்பது கண்டறியப்பட்டது. போலீஸார் அங்கு சென்று பையை மீட்டபோது, அதில் ஆப்பிள் வாட்ச் மட்டும் இருந்ததாகவும், ரூ.75 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் திருடப்பட்டிருந்ததாகவும் தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீரங்கம் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரயிலில் பயணித்தவர்கள், கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில் நகைகளை திருடியவர்களை கண்டறியும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.



