தமிழகத்தில் அதிரடி: சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்!
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே, நிர்வாக ரீதியாக பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்ந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது சென்னை உள்ளிட்ட 5 முக்கிய மாவட்டங்களின் ஆட்சியர்களை (Collectors) மாற்றி தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த புதிய உத்தரவின்படி, சென்னை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக மாலதி ஹெலன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அரியலூர் மாவட்ட ஆட்சியராக மிருனாளிணியும், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக சிவகுரு பிரபாகரனும் பொறுப்பேற்க உள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக சரண்யா அரியும், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக கவிதாவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
முக்கியப் பிரிவு மாற்றம்: மாவட்ட ஆட்சியர்கள் மட்டுமன்றி, ஆளுநரின் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றி வந்த கிர்லேஷ் குமார், தற்போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் முதன்மைச் செயலாளராகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நிர்வாகப் பணிகளைத் தொய்வின்றி வேகப்படுத்தவும், புதிய அரசின் திட்டங்களை மாவட்ட அளவில் திறம்படச் செயல்படுத்தவும் இந்த அதிரடி ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த புதிய நியமனங்கள் உடனடியாக அமலுக்கு வரும் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






