நாற்காலி கிடைத்தது: கர்நாடகாவின் புதிய முதலமைச்சராகிறார் டி.கே.சிவகுமார்! ஜூன் 3-ல் பதவியேற்பு!
கர்நாடக அரசியலில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த முதலமைச்சர் நாற்காலிக்கான அதிகாரப் போட்டி ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. கர்நாடக மாநில காங்கிரஸின் சட்டமன்றக் குழுத் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டி.கே.சிவகுமார், வரும் ஜூன் 3-ம் தேதி அம்மாநிலத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ளார். முன்னதாக, முதலமைச்சராக இருந்த சித்தராமையா கடந்த 28-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் பெங்களூரில் உள்ள விதான் சவுதா அரங்கில் விறுவிறுப்பாக நடைபெற்றது.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜேவாலா, முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், டி.கே.சிவகுமார் சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்தத் முடிவுக்கு காங்கிரஸ் மேலிடமும் உடனடியாகத் தன் பச்சைக்கொடியைக் காட்டியது.
ஆளுநரிடம் உரிமை கோரல்: சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, டி.கே.சிவகுமார் ஆளுநரை நேரில் சந்தித்து கர்நாடகாவில் புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர் மாளிகை, வரும் 3-ம் தேதி டி.கே.சிவகுமார் கர்நாடக முதலமைச்சராகப் பதவியேற்க அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. அதுவரை சித்தராமையா தற்காலிக முதலமைச்சராக நீடிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸின் ‘ட்ரபிள் ஷூட்டர்’ என்று அழைக்கப்படும் டி.கே.சிவகுமார், இறுதியாக கர்நாடகாவின் முதலமைச்சர் நாற்காலியைக் கைப்பற்றியிருப்பது அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.






