“இலவசமாகக் கட்டுமானப் பொருட்கள் கேட்டு மிரட்டல்” – கூலித் தொழிலாளியைத் தாக்கிய தவெக மாவட்ட நிர்வாகி கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!
சென்னை / தாம்பரம்:
சென்னை அடுத்த தாம்பரம் அருகே கூலித் தொழிலாளி மற்றும் கட்டட உரிமையாளரைச் சரமாரியாகத் தாக்கிய விவகாரத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) செங்கல்பட்டு மாவட்ட முக்கிய நிர்வாகி ஒருவரைத் தவெக தலைமை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளது. சென்னை பீர்க்கங்கரணை புத்தம் நகர் பகுதியில், பழைய அடுக்குமாடி கட்டடம் ஒன்றை இடிக்கும் பணி நடைபெற்று வந்தது. அங்கிருந்து எடுக்கப்பட்ட செங்கல், ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை லாரிகளில் ஏற்றி விற்பனை செய்யும் பணியில் கூலித் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது அங்கு வந்த தவெக செங்கல்பட்டு வடமேற்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ஜெய்கிருஷ்ணன் என்பவர், அங்கிருந்த பொக்லைன் இயந்திர ஓட்டுநரிடம் கட்டுமானப் பொருட்களைத் தனக்குக் காசு தராமல் இலவசமாகத் தர வேண்டும் என மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதற்கு அந்தப் பொக்லைன் ஓட்டுநர் மற்றும் அங்கிருந்தவர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். இதனால் கடும் கோபமடைந்த ஜெய்கிருஷ்ணன், உடனடியாகத் தனது ஆதரவாளர்களை அடியாட்களாக அப் பகுதிக்கு வரவழைத்து, பொக்லைன் ஓட்டுநர் மற்றும் அந்தக் கட்டடத்தின் உரிமையாளரை நடுரோட்டில் வைத்துச் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
அரசியல் பலத்தைக் காட்டி கூலித் தொழிலாளி மீது நடத்தப்பட்ட இந்த கொடூரத் தாக்குதல் குறித்த சிசிடிவி மற்றும் மொபைல் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியது. இந்த விவகாரம் கட்சியின் கவனத்திற்குச் சென்றதை அடுத்து, தவெக கட்சியின் ஒழுங்கு மற்றும் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட செங்கல்பட்டு மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ஜெய்கிருஷ்ணனை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் உடனடியாக நீக்குவதாகத் தவெக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தவறு செய்த நிர்வாகி மீது தவெக தலைமை எடுத்துள்ள இந்த அதிரடி ஒழுங்கு நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.




