மின்கட்டண உயர்வால் தொழிற்சாலைகள் மூடல்; இளைஞர்கள் போதைக்கு அடிமை: திமுக அரசு மீது டிடிவி தினகரன் கடும் தாக்கு!
தமிழகத்தில் திமுக ஆட்சியின் தவறான கொள்கைகளால் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி விரக்தியின் உச்சத்திற்குச் சென்று, போதைக்கு அடிமையாகி கூலிப்படைகளாக மாறும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வேதனை தெரிவித்துள்ளார். மதுரை திருமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.பி. உதயகுமாரை ஆதரித்துப் பேசிய அவர், மாணவர்களைக் குறிவைத்து போதைப்பொருள் வியாபாரம் தங்குதடையின்றி நடைபெறுவதாகக் குற்றஞ்சாட்டினார்.
உலகப் புகழ்பெற்ற ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு இணையான தமிழகக் காவல்துறை, இன்று திமுகவினரிடம் கைகட்டி நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகச் சாடினார். மேலும், மின்கட்டண உயர்வு காரணமாகத் தமிழகத்தில் பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருவதாகவும், அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். “அதிமுக ஆட்சி அமைந்த மூன்றே மாதங்களில் தமிழகம் கஞ்சா இல்லாத மாநிலமாக மாற்றப்படும்” என உறுதியளித்த தினகரன், மதுரை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து திமுக பொய்யான தகவல்களைப் பரப்பி வருவதாகவும் தெரிவித்தார்.




