இந்தியா மீதான பொருளாதாரத் தடைகள் பூமராங் போலத் திரும்பித் தாக்கும்: ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற சர்வதேச பொருளாதார கூட்டமைப்பின் மாநாட்டில் அதிபர் விளாடிமிர் புதின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடியின் திறமையான தலைமையின்கீழ் இந்தியா தனது இறையாண்மை மிக்க நாடாகவும், முற்றிலும் தன்னிச்சையாக முடிவெடுக்கும் ஆற்றலுடனும் செயல்பட்டு வருவதாகப் பாராட்டு தெரிவித்தார். மேலும், சில நாடுகள் இந்தியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தால், அது சம்பந்தப்பட்ட நாடுகளையே பூமராங் போலத் திரும்பிச் சென்று கடுமையாகத் தாக்கும் என்று அவர் எச்சரித்தார். உலகளாவிய பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், ரஷ்யாவுடனான உறவைக் குறைத்துக் கொள்ளுமாறு இந்தியாவுக்குச் சில நாடுகள் அழுத்தம் கொடுப்பது உலக ஸ்திரத்தன்மைக்கே தீங்கு விளைவிக்கும் என்றும் குறிப்பிட்டார்.





