அந்தமான் கடற்பகுதியில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு: இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு மத்திய அரசு வாழ்த்து
புதுடெல்லி: நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு ஆழ்கடல் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மத்திய அரசின் ‘சமுத்திர மந்தன் இயக்கம்’ என்ற தேசிய ஆழ்கடல் ஆய்வுத் திட்டத்தின்கீழ், அந்தமான் தீவுகளின் கிழக்குக் கடற்கரையிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீ விஜயபுரம் பகுதியில் புதிய இயற்கை எரிவாயு வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இயோசின் அடுக்கில் 1,900 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் நடத்தப்பட்ட சோதனையின்போது தொடர்ந்து எரிந்த சுடர், அங்கு எரிவாயு இருப்பதை உறுதி செய்துள்ளது. இந்த வரலாற்றுச் சாதனைக்காக இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், சர்வதேச ஆழ்கடல் ஆய்வு நிபுணர்களுடன் இணைந்து நாட்டின் ஆய்வு லட்சியங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



