மத்திய அமைச்சர் எல்.முருகன் தீவிர பிரச்சாரம்: “திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும்” என திருப்பூர் மக்களுக்கு வேண்டுகோள்!
திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரும், மத்திய அமைச்சருமான எல்.முருகன், அவிநாசி வட்டாட்சியர் அலுவலகம் முதல் பேருந்து நிலையம் வரை ஊர்வலமாக நடந்து சென்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். வழிநெடுகிலும் பொதுமக்களும், தொண்டர்களும் அவருக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வீடு வீடாகவும், கடைகளுக்கும் நேரடியாகச் சென்று வாக்கு கேட்ட எல்.முருகன், தமிழகத்தில் நிலவும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, வரி உயர்வு மற்றும் பால் விலை உயர்வு உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டு, மக்கள் நலன் கருதி திமுக-வை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். பிரதமர் மோடியின் சாதனைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் எடுத்துரைத்து தாமரை சின்னத்திற்கு ஆதரவு திரட்டிய அவர், செல்லும் வழியில் உள்ள கோயில்களில் சாமி தரிசனம் செய்து, அங்குள்ள பூசாரிகள் மற்றும் பக்தர்களிடமும் வாக்கு சேகரித்தார்.




