கல்விக்கட்டணம் என்பது கருப்புப்பணம் அல்ல, விளம்பரத்தில் வெளியிடலாம்: சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்துத் தனியார் பள்ளிகளும் தங்களது கல்விக் கட்டண விவரங்களை விளம்பரப் பலகைகளில் கட்டாயமாக வெளியிட வேண்டும் என்ற மாநில தகவல் ஆணையம் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநரகத்தின் உத்தரவை எதிர்த்து, அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி எம். தண்டபாணி, கல்விக் கட்டணம் என்பது ஒன்றும் மறைக்கப்பட வேண்டிய கருப்புப் பணம் அல்ல என்பதால், அதன் விபரங்களை தாராளமாக விளம்பரப் பலகையில் வெளியிடலாம் என்று அதிரடி கருத்து தெரிவித்தார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழக அரசு வரும் ஜூன் 18-ஆம் தேதிக்குள் விரிவான பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அன்றைய தினத்திற்குத் தள்ளிவைத்தார்.




