அமெரிக்க செனட் சபையில் மசோதா நிறைவேற்றம்: இந்திய பொருட்களுக்கு 100% வரி விதிக்க வாய்ப்பு
ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை மேலும் கடுமையாக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட மசோதாவுக்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்க அமெரிக்க அதிபருக்கு அதிகாரம் வழங்கும் வகையில் இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.
“லிண்ட்சே ஓ. கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026” என பெயரிடப்பட்டுள்ள இந்த மசோதா, அமெரிக்க செனட் சபையில் 86-11 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ரஷ்யாவின் எரிசக்தி வளங்களை அதிக அளவில் வாங்கும் நாடுகளை குறிவைத்து இந்த புதிய தடைகள் மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த மசோதாவில் இந்தியா, சீனா, அஜர்பைஜான், ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய 5 நாடுகள் இடம்பெற்றுள்ளன. உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டு வரவும், ரஷ்யாவுக்கான நிதி ஆதாரங்களை கட்டுப்படுத்தவும், இந்த நாடுகளின் ஏற்றுமதி பொருட்களுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்கும் அதிகாரத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு வழங்கும் வகையில் மசோதா அமைந்துள்ளது.
இதன் மூலம் இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கப்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை நடைமுறைக்கு வந்தால், அமெரிக்க சந்தையில் இந்திய பொருட்களின் விலை கணிசமாக அதிகரிக்கக்கூடும்.
அமெரிக்கா இந்தியப் பொருட்களுக்கு 100 சதவீத வரியை விதிக்கும் பட்சத்தில், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் அமெரிக்க சந்தையில் கடுமையான போட்டியை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். இதனால் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கும், அமெரிக்க சந்தையில் இந்தியப் பொருட்களின் விற்பனைக்கும் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.



