தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக பாடுவதையும் அவமதிப்பாக கருதக் கூடாது: சி.பி.ராதாகிருஷ்ணன்
திருவாரூரில் நடைபெற்ற தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் 11-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களையும் பதக்கங்களையும் வழங்கினார். நிகழ்ச்சியில் பல்கலைக்கழக வேந்தர் பத்மநாபன் தலைமை வகித்தார். துணைவேந்தர் சுலோச்சனா சேகர் வரவேற்ற நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் மற்றும் நாகை எம்.பி. செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தங்கப் பதக்கம் பெற்ற 50 மாணவ, மாணவிகளுக்கு குடியரசு துணைத் தலைவர் பதக்கங்களையும் பட்டங்களையும் வழங்கி பாராட்டினார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் மொத்தம் 1,053 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர். பல்துறை கல்வி, ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட கற்றலுக்கு தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் முக்கியத்துவம் அளித்து வருவது பாராட்டுக்குரியது என்றும் அவர் தெரிவித்தார்.
பெண்களின் உயர்கல்விச் சேர்க்கை 2014-15-ம் ஆண்டில் 1.57 கோடியாக இருந்த நிலையில், 2023-24-ம் ஆண்டில் 2.24 கோடியாக அதிகரித்துள்ளதாகவும், இது 42.2 சதவீத வளர்ச்சி என்றும் சி.பி.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார். தான் பங்கேற்கும் பல்வேறு பட்டமளிப்பு விழாக்களில் ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில் பெண்கள் பட்டம் பெறுவது வரவேற்கத்தக்க மாற்றமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
பட்டம் பெற்று வகுப்பறைகளை விட்டு வெளியேறினாலும், மாணவர்கள் கற்றலை ஒருபோதும் நிறுத்தக் கூடாது என்றும், இன்று பெறும் பட்டம் வாழ்நாள் முழுவதும் தொடரும் அறிவுத் தேடலுக்கான தொடக்கம் மட்டுமே என்றும் குடியரசு துணைத் தலைவர் அறிவுறுத்தினார். எந்தத் துறையைத் தேர்வு செய்தாலும், நாட்டின் வளர்ச்சிக்கு மாணவர்கள் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பிரதமர் மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், சுதந்திரத்தின் நூற்றாண்டை ஒட்டி வளர்ச்சி பெற்ற, அனைவரையும் உள்ளடக்கிய, புதுமையான மற்றும் நிலையான இந்தியாவை உருவாக்கும் “Viksit Bharat @2047” இலக்கை நாடு முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த இலக்கை நிறைவேற்றுவதில் இளைஞர்களின் ஆற்றல், கற்பனைத் திறன் மற்றும் தலைமைத்துவம் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர் கூறினார்.
ஒவ்வொரு செயலிலும் தேசமே முதன்மை என்ற எண்ணத்தை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் சி.பி.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார். பொதுத்தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுப்பதற்கும் மாணவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பொதுத்தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகள் தடுப்பு) திருத்த மசோதா முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தான் ஜார்க்கண்ட் ஆளுநராக இருந்தபோது இதே நோக்கத்தைக் கொண்ட சட்டத்தை அந்த மாநில அரசு நிறைவேற்றியதாகவும், அதற்கு உடனடியாக ஒப்புதல் வழங்கி சட்டமாக்கியதாகவும் அவர் தெரிவித்தார். பொதுத்தேர்வு முறையின் நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதில் இதுபோன்ற சீர்திருத்தங்கள் முக்கியமானவை என்றும் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.
இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தலை கட்டுப்படுத்த காவல்துறையினர் குற்றவாளிகள் மீது எந்தவித கருணையும் காட்டக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். மாணவர்கள் போதைப்பொருட்களைத் தவிர்ப்பதுடன், தங்களது நண்பர்களும் போதைப்பொருளில் இருந்து விலகி இருக்க அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
இதனிடையே, தற்போது எந்தவொரு விவகாரமும் அரசியல் மையப்படுத்தப்பட்டு வருவதாக சி.பி.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்தார். அண்மையில் தமிழக முதல்வர் மற்றும் முன்னாள் முதல்வர்கள் இருவர், சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்து முதன்மையாக பாடப்பட வேண்டும் என்று தெரிவித்திருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக பாடுவதால் அதனை அவமதிப்பதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் அவர் கூறினார். சொந்த நாட்டையும் பெற்ற தாயையும் யாரும் அவமானப்படுத்த மாட்டார்கள் என்பதைப் போலவே, தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக பாடப்படுவதையும் அவமதிப்பாக கருதாமல் அணுக வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.



