சொத்துக் குவிப்பு வழக்கில் ராகுல் காந்திக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு
சொத்துக் குவிப்பு தொடர்பான வழக்கில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் எந்தவொரு அறிக்கையையும் தாக்கல் செய்ய வேண்டாம் என்றும் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கர்நாடக பாஜகவைச் சேர்ந்த விக்னேஷ் ஷிஷிர் என்பவர், ராகுல் காந்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறி, அது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், புகார் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
ராகுல் காந்தி சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி தனது தரப்பு வாதங்களை முன்வைத்தார். அவரது வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த விக்னேஷ் ஷிஷிர், சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் வரை, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ள விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதனால் ராகுல் காந்திக்கு எதிரான அந்த வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அதேபோல், ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளின் அடிப்படையில் இந்த வழக்கு தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் எந்தவொரு அறிக்கையையும் தாக்கல் செய்யக் கூடாது என்றும் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் தெளிவான உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.



