கோதுமை, பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பாகிஸ்தான் முழுவதும் தொடர் போராட்டம்
பாகிஸ்தானில் கோதுமை மாவு, பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. உணவுப் பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விலைவாசி உயர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
பாகிஸ்தான் முழுவதும் தற்போது கோதுமைக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மார்ச் மாதத்தில் அந்நாட்டில் 20 கிலோ கோதுமை மாவு பாக்கெட் ரூ.1,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்திய ரூபாய் மதிப்பில் இது சுமார் ரூ.616.71 ஆகும். ஆனால், தற்போது அதே அளவு கோதுமை மாவின் விலை ரூ.3,200 ஆக அதிகரித்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் இது சுமார் ரூ.1,096.38 ஆகும்.
இதனுடன் சமையல் எண்ணெய் மற்றும் பல்வேறு மளிகைப் பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒரே வாரத்தில் உணவுப் பொருட்களின் விலை 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
பெட்ரோல், டீசல் விலையும் உயர்வு
உணவுப் பொருட்களின் விலை உயர்வுடன் பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. அங்கு தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.459-க்கும், இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.157.26-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு லிட்டர் டீசல் ரூ.520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.178.16 ஆகும்.
கோதுமை மாவு, பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்டவற்றின் விலை உயர்வால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து ஜமாத் இ இஸ்லாமி கட்சி சார்பில் பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
விலைவாசி உயர்வுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களால் அந்நாட்டில் அரசியல் மற்றும் சமூக ரீதியான நெருக்கடியும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, உள்நாட்டுப் பிரச்சினைகள் மற்றும் தொடர்ந்து அதிகரித்து வரும் விலைவாசி காரணமாக பாகிஸ்தான் பல்வேறு பகுதிகளாகப் பிரியும் அபாயம் இருப்பதாக சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



