காசாவில் 2023 இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த 112 பேருக்கு கூட்டு இறுதிச் சடங்கு நடைபெற்றது
காசா பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 112 பேரின் உடல்கள் தற்போது மீட்கப்பட்டு, அவர்களுக்கு கூட்டு இறுதிச் சடங்கு நடைபெற்றுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்கள் பாலஸ்தீன தேசிய கொடியால் போர்த்தப்பட்டு, பிரார்த்தனைகளுக்கு பிறகு காசாவில் அடக்கம் செய்யப்பட்டன.
கடந்த 2023 அக்டோபரில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலை தொடர்ந்து, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான மோதல் தீவிரமடைந்தது. இதன் பின்னர் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தொடர் தாக்குதல்களில் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், 2023 நவம்பர் 22-ம் தேதி இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் காசா குடியிருப்பு பகுதிகள் கடுமையாக சேதமடைந்தன. அப்பகுதியில் வசித்து வந்த பலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர். அந்த தாக்குதலில் சுமார் 300 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் அமைப்புகள் தெரிவித்தன.
அப்போது 40 பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்ட நிலையில், மீதமுள்ளவர்களின் உடல்கள் இடிபாடுகளுக்குள் புதைந்திருந்தன. கடந்த வாரம் மீண்டும் நடைபெற்ற மீட்பு பணிகளில் 112 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதில் 40 பேர் குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்னும் சுமார் 150 பேரின் உடல்கள் அந்த பகுதியில் இருந்து மீட்கப்பட வேண்டியுள்ளது என ஹமாஸ் உள்விவகார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மீட்கப்பட்ட உடல்களுக்கு நடைபெற்ற இறுதிச் சடங்கில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
தாக்குதலில் உறவினரை இழந்த ஒருவர், பாதுகாப்பான இடம் என நினைத்து வீடுகளில் தஞ்சமடைந்த அப்பாவி மக்கள் பலரும் உயிரிழந்ததாக வேதனையுடன் தெரிவித்துள்ளார். காசா சுகாதாரத்துறை தகவலின்படி, மேலும் ஆயிரக்கணக்கான உடல்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அச்சம் நிலவுகிறது.
இதற்கிடையில், காசா போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்ததாக கூறப்படுகிறது. அதன்படி, இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும், ஹமாஸ் மற்றும் அதன் கூட்டமைப்புகள் செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைதி ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தங்களுக்கு தொடரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து இஸ்ரேல் தரப்பு கவலை தெரிவித்துள்ளது. இதனால் காசா பகுதியில் அமைதி திரும்புமா என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து நிலவி வருகிறது.



