பாகிஸ்தானில் அமைதிப் பேரணியில் மனித வெடிகுண்டு தாக்குதல்; 5 காவலர்கள் உட்பட 14 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நடைபெற்ற அமைதிப் பேரணியை குறிவைத்து நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 5 காவல்துறை அதிகாரிகள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்வாத் மாவட்டத்தின் கபல் காவல் நிலையம் அருகே, ‘ஸ்வாத் அமைதி ஜிர்கா’ என்ற உள்ளூர் அமைப்பின் சார்பில் தீவிரவாதத்திற்கு எதிராக அமைதிப் பேரணி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தீவிரவாதத்துக்கு எதிராக முழக்கமிட்டபடி சென்றபோது, தற்கொலைப்படை தாக்குதலாளி ஒருவர் கூட்டத்திற்குள் நுழைந்து தனது உடலில் இருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் மீட்புப் படையினர் உடனடியாக விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பினர். இதையடுத்து பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்தை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர். காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், தஹ்ரீக்-ஏ-தாலிபான் பாகிஸ்தான் (TTP) அமைப்பின் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பாதுகாப்பு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் தீவிரவாதத் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த மனித வெடிகுண்டு தாக்குதல் பாதுகாப்பு சூழல் குறித்த கவலையை மேலும் அதிகரித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி கடும் கண்டனம் தெரிவித்து, குற்றவாளிகளை விரைவில் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.



