ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அரசுக்கு எதிராக பேரணி: பாக். படையினர் துப்பாக்கிச் சூட்டில் 30 பேர் பலி
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அரசுக்கு எதிராக நடைபெற்ற பேரணியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, நிர்வாக அலட்சியம், சிறுபான்மையினருக்கு எதிரான அரசியல் பாகுபாடு மற்றும் அத்துமீறல்களைக் கண்டித்து கடந்த மாதம் முதல் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் ஜூன் 27 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிக்குமாறு கூட்டு அவாமி நடவடிக்கை குழு (JAAC) அழைப்பு விடுத்துள்ளது. மேலும் பாகிஸ்தான் அரசுக்கு எதிரான போராட்டங்களை அந்த அமைப்பு முன்னின்று நடத்தி வருகிறது. இந்த போராட்டங்களை ஒடுக்க கூடுதல் ஆயுதப்படைகளை பாகிஸ்தான் அரசு குவித்துள்ள நிலையில், பேரணியில் ஈடுபட்டவர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.



