பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதற்றம்: தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் 20 பேர் உயிரிழப்பு
முஸஃபராபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) நடைபெற்று வரும் தேர்தலை புறக்கணிக்கக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 53 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு ஜூலை 27-ஆம் தேதி தொடங்கிய நிலையில், தேர்தலை புறக்கணிக்கக் கோரி ‘ஜாயிண்ட் அவாமி ஆக்ஷன் கமிட்டி’ (JAAC) உள்ளிட்ட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், ராவலாகோட் பகுதியில் உள்ள டிரேக் எய்த் உள்ளிட்ட இடங்களில் திரண்ட போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதில், ஜாயிண்ட் அவாமி ஆக்ஷன் கமிட்டியின் முக்கிய நிர்வாகி உமர் நசீர் காஷ்மீரியின் சகோதரர் உஸ்மான் நசீர் உட்பட 20 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்களில், போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களின் உடல்கள் சாலைகளில் கிடக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜூன் 5-ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் தொடர் போராட்டங்களில், பாகிஸ்தான் படைகளின் நடவடிக்கைகளால் இதுவரை 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக போராட்ட அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.
அப்பகுதியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் அகீல் பாய் கூறுகையில், “நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. ராவலாகோட் பகுதி முழுவதும் உயிரிழந்தவர்களாலும் காயமடைந்தவர்களாலும் நிறைந்துள்ளது. சர்வதேச ஊடகங்கள் எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை என கூறப்படுகிறது. அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.



