ட்ரம்புடனான தொடர்புகள் சர்ச்சை: அமெரிக்க காங்கிரஸில் ஆஜராக ஃபிபா தலைவர் இன்ஃபாண்டினோவுக்கு அழைப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் ஃபிபா தலைவர் கியானி இன்ஃபாண்டினோ வைத்திருந்ததாகக் கூறப்படும் தொடர்புகள் தொடர்பாக அமெரிக்க காங்கிரஸில் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்கவும், தொடர்புடைய ஆவணங்களை சமர்ப்பிக்கவும் இன்ஃபாண்டினோவை அமெரிக்க பிரதிநிதிகள் சபை நீதித்துறை குழுவின் மூத்த ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஜேமி ரஸ்கின் அழைத்துள்ளார்.
இதுதொடர்பாக இன்ஃபாண்டினோவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், ட்ரம்ப் மற்றும் அவரது நிர்வாகத்துடன் ஃபிபா மேற்கொண்ட தகவல் பரிமாற்றங்கள், பரிசுப் பரிமாற்றங்கள், நிதிசார் சலுகைகள் மற்றும் அதிகாரப்பூர்வ தொடர்புகள் குறித்த அனைத்து ஆவணங்களையும் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நியூயார்க் நகரில் உள்ள ட்ரம்ப் டவரில் ஃபிபா அலுவலகம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, ட்ரம்ப்–இன்ஃபாண்டினோ உறவு அதிக கவனத்தை ஈர்த்தது. அதேபோல், உலகக் கோப்பை குலுக்கல் விழாவில் ட்ரம்புக்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஃபிபா அமைதிப் பரிசு’ வழங்கப்பட்டதும் விமர்சனங்களுக்கு வழிவகுத்தது. மேலும், உலகக் கோப்பை தொடரின்போது அமெரிக்க வீரர் ஃபோலரின் பாலோகனுக்கு விதிக்கப்பட்ட சிவப்பு அட்டை தடையை நீக்குமாறு ட்ரம்ப் பலமுறை வலியுறுத்தியதாகவும், பின்னர் ஃபிபா அந்தத் தடையை ரத்து செய்ததாகவும் கூறப்படும் தகவல்கள் கால்பந்து வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
ஸ்பெயின் உலகக் கோப்பையை வென்ற இறுதிப்போட்டிக்குப் பிறகு, ட்ரம்ப், கனடா மற்றும் மெக்சிகோ தலைவர்களுடன் இணைந்து இன்ஃபாண்டினோ கோப்பையை வழங்கிய நிகழ்வும் சர்ச்சையை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனுடன், உலக கால்பந்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதாக உறுதியளித்து பதவியேற்ற இன்ஃபாண்டினோ, பின்னர் ஃபிபாவின் நெறிமுறை கண்காணிப்பு அமைப்புகளை பலவீனப்படுத்தியதாக ஜேமி ரஸ்கின் தனது கடிதத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.
உலகக் கோப்பை டிக்கெட் விற்பனையில் பயன்படுத்தப்பட்ட ‘டைனமிக் பிரைசிங்’ முறையும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த முறையால் டிக்கெட் விலைகள் திடீரென உயர்ந்து ரசிகர்கள் பாதிக்கப்பட்டதாகவும், இதுதொடர்பாக அமெரிக்காவின் பல மாநிலங்களில் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவணங்களை சமர்ப்பித்து, விசாரணைக்கு நேரம் ஒதுக்க ஆகஸ்ட் 9 வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாததால், குடியரசுக் கட்சியின் ஆதரவு இன்றி இன்ஃபாண்டினோவை கட்டாயப்படுத்தும் அதிகாரம் ரஸ்கினுக்கு இல்லை.
இதற்கிடையில், 2031 மகளிர் உலகக் கோப்பையை அமெரிக்கா நடத்தவுள்ள நிலையில், 2038 ஆண்கள் உலகக் கோப்பையையும் நடத்தும் வாய்ப்பு குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில், சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள இன்ஃபாண்டினோ, உலகக் கோப்பை வெற்றிகரமாக நடைபெற்றதாகவும், தன்னை விமர்சிப்பவர்கள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பரப்புவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஃபிபா தலைவர் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட உறுப்பு நாடுகள் தமக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், சில நாடுகள் மட்டும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் கூறியுள்ளார்.



