பதவிக்காலம் நிறைவடையும் முன்பே வங்கதேச அதிபர் சஹாபுதீன் ராஜினாமா அறிவிப்பு
வங்கதேச அதிபர் சஹாபுதீன், தனது பதவிக்காலம் முடிவடைய இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், உடல்நலக் காரணங்களை முன்வைத்து பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். 2023-ஆம் ஆண்டு வங்கதேசத்தின் அதிபராக பொறுப்பேற்ற அவர், தனது ராஜினாமா முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
76 வயதான சஹாபுதீன், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கூட்டணியில் முக்கிய தலைவராக செயல்பட்டவர். அதற்கு முன்பு வங்கதேச நீதித்துறையில் நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். கடந்த 2024-ஆம் ஆண்டு மாணவர் போராட்டங்களால் ஏற்பட்ட அரசியல் பரபரப்பின் பின்னர், பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தாலும், சஹாபுதீன் அதிபர் பதவியில் தொடர்ந்து செயல்பட்டு வந்தார்.
இதற்கிடையில், தற்போதைய பிரதமர் தாரிக் ரகுமான் தலைமையிலான அரசுக்கு, சஹாபுதீன் அதிபர் பதவியில் நீடிப்பதில் விருப்பம் இல்லை என்ற தகவல்கள் வெளியாகின. இந்தச் சூழலில், மருத்துவக் காரணங்களால் பதவியில் இருந்து விலகுவதாக அவர் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சஹாபுதீனின் ராஜினாமா கடிதம், வங்கதேச நாடாளுமன்ற சபாநாயகர் ஹஃபிஜுதீன் அகமதுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வங்கதேச அரசியல் சாசன விதிகளின்படி, புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படும் வரை சபாநாயகர் தற்காலிக அதிபராக பொறுப்பேற்று நாட்டின் அரசியல் மற்றும் நிர்வாகப் பொறுப்புகளை கவனிப்பார். இந்த ராஜினாமா, வங்கதேச அரசியல் வட்டாரங்களில் முக்கிய திருப்பமாகக் கருதப்படுகிறது.



