பிரிட்டனின் 59-வது பிரதமராக ஆன்டி பர்ன்ஹாம் பதவியேற்பு: 10 ஆண்டுகளில் 7-வது பிரதமர் ஆவார்
பிரிட்டனின் 59-வது பிரதமராக ஆன்டி பர்ன்ஹாம் நேற்று அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்றுக் கொண்டார். இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் பிரிட்டன் நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்கும் 7-வது தலைவர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று கெய்ர் ஸ்டார்மர் பிரதமரானார். எனினும், உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி உள்ளிட்ட காரணங்களால் ஸ்டார்மர் ஜூன் 22-ம் தேதி பதவி விலகியதைத் தொடர்ந்து, 56 வயதான ஆன்டி பர்ன்ஹாம் புதிய தலைவராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மன்னர் சார்லஸைச் சந்தித்து கெய்ர் ஸ்டார்மர் தனது ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பித்த நிலையில், புதிய அரசை அமைக்குமாறு மன்னர் விடுத்த அழைப்பை ஏற்றுப் பர்ன்ஹாம் முறைப்படி நாட்டின் பிரதமராகப் பதவியேற்றார்.
‘வடக்கின் ராஜா’ என்று அழைக்கப்படும் முன்னாள் மான்செஸ்டர் மேயரான பர்ன்ஹாம், பிரதமராகப் பதவியேற்ற பின் பேசிய தனது முதல் உரையில் பிரிட்டனுக்கு ஒரு புதிய பாதையை வகுக்கவும், மக்களின் வாழ்க்கைச் செலவுகளைக் குறைக்கவும் கவனம் செலுத்தவுள்ளதாகத் தெரிவித்தார்.



