அண்ணாமலையாரை தரிசனம் செய்த அமித் ஷா: திருவண்ணாமலையில் உற்சாக வரவேற்பு
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இரண்டு நாள் பயணமாக வந்த நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். அவரது வருகையையொட்டி திருவண்ணாமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், பொதுமக்களும் கட்சித் தொண்டர்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சென்னை விமான நிலையத்துக்கு நேற்று மாலை வந்த அமித் ஷா, அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலைக்கு புறப்பட்டார். மாலை 5.20 மணியளவில் திருவண்ணாமலையில் உள்ள தனியார் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிகாப்டர் தளத்தில் அவர் தரையிறங்கினார். அங்கு மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.உதயகுமார் ஆகியோர் மலர் கொத்து வழங்கி அவரை வரவேற்றனர்.
இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் சாலை மார்க்கமாக காரில் புறப்பட்ட அமித் ஷா, மாலை 5.30 மணியளவில் அண்ணாமலையார் கோயிலுக்கு சென்றடைந்தார். அவர் கோயிலுக்கு வரும் வழியில் சாலையின் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், அதன் பின்னால் திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் மலர்களைத் தூவி உற்சாகமாக வரவேற்றனர்.
கோயிலுக்கு வந்த அமித் ஷாவுக்கு கோயில் நிர்வாகம் மற்றும் சிவாச்சாரியார்கள் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மன் சன்னதிகளில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் அவர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதையடுத்து மாலை 6.20 மணியளவில் கோயிலில் இருந்து புறப்பட்ட அமித் ஷா, கிரிவலப் பாதையில் அமைந்துள்ள ரமண மகரிஷி ஆசிரமத்துக்கு மாலை 6.30 மணிக்கு சென்றார். அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையிலும் அவர் பங்கேற்றார். பின்னர் மாலை 6.55 மணியளவில் ஆசிரமத்தில் இருந்து புறப்பட்ட அவர், சாலை மார்க்கமாக திண்டிவனம் வழியாக புதுச்சேரிக்கு புறப்பட்டுச் சென்றார்.
பக்தர்களுக்கு தற்காலிக அனுமதி மறுப்பு
அமித் ஷாவின் வருகையை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலில் நேற்று மாலை 4 மணி முதல் 6.30 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தற்காலிகமாக அனுமதி மறுக்கப்பட்டது. அவரது பாதுகாப்பை கருத்தில் கொண்டு கோயில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
வடக்கு மண்டல ஐஜி பிரவீன்குமார் அபினவ், வேலூர் சரக டிஐஜி மகேஷ், 4 மாவட்டங்களைச் சேர்ந்த காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அமித் ஷாவின் திருவண்ணாமலை வருகையையொட்டி நகரம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.



