அமித் ஷா நாளை புதுச்சேரி வருகை: 1,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபாடு
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை புதுச்சேரி வருகையையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அவரது பயணத்தை முன்னிட்டு மத்திய ரிசர்வ் படையினர் மற்றும் புதுச்சேரி போலீஸார் என 1,000-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி காவல் துறைக்கு வழங்கப்பட்டுள்ள குடியரசுத் தலைவரின் வண்ண விருது வழங்கும் விழா, வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி கோரிமேடு போலீஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு புதுச்சேரி காவல் துறைக்கு விருதுகளை வழங்க உள்ளார். இதற்காக அவர் நாளை சனிக்கிழமை மாலை புதுச்சேரி வருகிறார்.
சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி விமான நிலையம் வரும் அமித் ஷா, அங்கிருந்து சாலை மார்க்கமாக ராஜீவ் காந்தி சிலை அருகே உள்ள ஓட்டல் அக்கார்டுக்கு செல்கிறார். அவரது தங்குமிடத்தில் தேவையான அனைத்து பாதுகாப்பு மற்றும் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 9-ஆம் தேதி காலை கோரிமேடு போலீஸ் மைதானத்தில் நடைபெறும் விழாவில் அவர் பங்கேற்கிறார். இதையொட்டி விமான நிலையம் முதல் ராஜீவ் காந்தி சதுக்கம், கோரிமேடு செல்லும் சாலைகளில் தடுப்புகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அமித் ஷா வருகையை முன்னிட்டு மத்திய ரிசர்வ் படையின் 8 கம்பெனி பாதுகாப்புப் படையினர் புதுச்சேரிக்கு வந்துள்ளனர். புதுச்சேரி காவல்துறையை சேர்ந்த 500 போலீஸார் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீரமைப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். இவர்களுடன் ஐஆர்பிஎன் மற்றும் ரிசர்வ் படையினர் என மொத்தம் 1,000-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. நாளை மதியம் 2 மணி முதல் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் திண்டிவனம் சாலையில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன. ஆகஸ்ட் 9-ஆம் தேதி காலை 5.30 மணி முதல் அமைச்சர் நிகழ்ச்சியை முடித்து புறப்படும் வரை பாதுகாப்பு கட்டுப்பாடுகள் தொடரும்.
சிவாஜி சிலை பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் முத்தியால்பேட்டை வழியாக திருப்பி விடப்படும் என்றும், ஜிப்மர் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் மேட்டுப்பாளையம் வழியாக இந்திரா காந்தி சிலை நோக்கி மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரின் பயண வழித்தடத்தில் வாகனங்களை நிறுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், புதுச்சேரி ஆட்சியர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள உத்தரவில், பாதுகாப்பு காரணங்களுக்காக உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் பறக்க தடை மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ட்ரோன்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் உள்ளிட்ட எந்தவிதமான பறக்கும் சாதனங்களையும் இயக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா, 2023 சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், அமித் ஷா பங்கேற்கும் கோரிமேடு காவலர் மைதானத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடுகள் மற்றும் ஒத்திகை நிகழ்வுகளை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், தலைமைச் செயலர் சரத் சவுகான் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர் ஷாலினி சிங் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



