வெற்றி 150 திட்டம் அறிமுகம்: கிராமப்புற வேலை நாட்கள் 150 ஆக உயர்வு; சிங்கப்பெண் திட்டமும் அறிவிப்பு
தமிழக அரசின் திருத்த வரவு-செலவுத் திட்டத்தில், கிராமப்புற வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வேலை நாட்களை 125-ல் இருந்து 150 ஆக உயர்த்தும் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ‘வெற்றி 150’ என்ற பெயரில் செயல்படுத்தப்படவுள்ள இந்த முயற்சி, கிராமப்புற ஏழை மற்றும் நலிவுற்ற குடும்பங்களுக்கு கூடுதலாக 25 நாட்கள் வேலைவாய்ப்பை வழங்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் பட்ஜெட் உரையை வாசித்த நிதியமைச்சர் மரிய வில்சன், வளர்ச்சியடைந்த பாரதம்–கிராமப்புற வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் புதிய நிதிப் பங்கீட்டு முறை மாநில அரசுக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். மொத்த திட்டச் செலவில் மாநில அரசு 40 சதவீத பங்களிப்பை வழங்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாகவும், இந்த நிதிப் பங்கீட்டு முறையை மறுபரிசீலனை செய்யுமாறு ஒன்றிய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேநேரத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை பெரிதும் நம்பியிருக்கும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, மாநில அரசின் 5,057 கோடி ரூபாய் பங்களிப்புடன் மொத்தம் 12,642 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 125 நாட்கள் பணியை நிறைவு செய்துள்ள தகுதியான குடும்பங்களுக்கு கூடுதலாக 25 நாட்கள் வேலை வழங்கப்பட்டு, மொத்தம் 150 நாட்கள் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் என்றும், இதற்காக திருத்த பட்ஜெட்டில் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனுடன், மகளிர் சுயஉதவிக் குழுக்களை தொழில்முனைவோர்களாக உருவாக்கும் நோக்கில் ‘சிங்கப்பெண் வலிமைப்படுத்தும் திட்டம்’ என்ற புதிய திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் திறமையான சுயஉதவிக் குழு நிறுவனங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் முதலீட்டு மானியம் வழங்கப்படும். மேலும், நடப்பு ஆண்டில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 38,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் மற்றும் மானியம் வழங்கும் நடைமுறை முழுமையாக கணினிமயமாக்கப்பட்டு, இணைத் தணிக்கை வசதியுடன் செயல்படுத்தப்படும் என்றும், இதன் மூலம் நிதி பயனாளிகளிடம் காலதாமதமின்றி சென்றடைவது உறுதி செய்யப்படும் என்றும் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்காக திருத்த வரவு-செலவுத் திட்டத்தில் 39,609 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



