ஹஜ் பயண மானியம் ரூ.35 ஆயிரமாக உயர்வு: சிறுபான்மையினர் நலனுக்காக தமிழக பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள்
தமிழக பட்ஜெட் 2026-ல் சிறுபான்மையின மக்களின் நலனை முன்னிறுத்தி பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக, தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டி மூலம் முதல் முறையாக புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு வழங்கப்படும் அரசு மானியம் ரூ.25,000-ல் இருந்து ரூ.35,000 ஆக உயர்த்தப்படுவதாக நிதியமைச்சர் மரிய வில்சன் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
பட்ஜெட் உரையில், தமிழ்நாடு மதச்சார்பற்ற சமூக நீதி கொள்கையை கடைப்பிடிக்கும் மாநிலமாகவும், சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதில் முன்னோடியாகவும் தொடர்ந்து செயல்படும் என அரசு தெரிவித்துள்ளது. அதேபோல், சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மகளிரின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், ரூ.1.05 கோடி நிதி ஒதுக்கீட்டில் புதிய மகளிர் உதவும் சங்கங்கள் தொடங்கப்படவுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன், கபர்ஸ்தான்கள் மற்றும் கல்லறைத் தோட்டங்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.34 கோடி நிதி ஒதுக்கீடும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மையினரின் நலன் மற்றும் உரிமைகளை பாதுகாப்பதில் அரசு உறுதியாக இருப்பதாக தெரிவித்த நிதியமைச்சர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறைக்காக திருத்த வரவு-செலவுத் திட்டத்தில் மொத்தம் ரூ.1,700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார். இந்த அறிவிப்புகள் சிறுபான்மையின மக்களின் கல்வி, சமூக முன்னேற்றம் மற்றும் மத சார்ந்த தேவைகளை ஆதரிக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ளதாக அரசு விளக்கியுள்ளது.



