தமிழக பட்ஜெட் 2026: 8 கிராம் தங்கம், பட்டுப் புடவையுடன் ‘அண்ணன் சீர்’ திட்டம் அறிவிப்பு
தமிழக பட்ஜெட் 2026-ல் பெண்களின் நலன், மாணவர்களின் கல்வி, முதியோர் பாதுகாப்பு, குழந்தைகள் நலன் மற்றும் திருநர்களின் சமூக முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு பல புதிய நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பெண்களின் திருமண நன்னாளில் அரசின் சார்பில் “அண்ணன் சீர்” திட்டத்தின் கீழ் 8 கிராம் தங்க நாணயமும், ஒரு பட்டுப் புடவையும் வழங்கப்படும் என நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார். இந்தத் திட்டத்தை செயல்படுத்த ரூ.812 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள இந்த அறிவிப்பின்படி, தமிழகத்தின் அனைத்து பெண்களையும் தனது குடும்ப உறுப்பினர்களாகக் கருதும் வகையில் அரசு இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பெண்களின் திருமண நாளை சிறப்பிக்கும் நோக்கில், அரசின் சார்பில் தங்க நாணயமும் பட்டுப் புடவையும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களின் பொருளாதார பாதுகாப்பு மற்றும் சமூக நலனை வலுப்படுத்தும் முயற்சியாக இந்தத் திட்டம் அமையும் என்று அரசு விளக்கியுள்ளது.
மாணவர்களின் கல்வி மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் நோக்கில், தற்போதைய முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு “பெருந்தலைவர் காமராசர் காலை உணவுத் திட்டம்” எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், அதன் பயனாளிகள் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 17 முதல் அமலுக்கு வரும் இந்த விரிவாக்கத்தின் மூலம் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் கல்வி பயிலும் சுமார் 15.14 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள். இதற்காக ரூ.710 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
முதியோர் நலனுக்காக, மாவட்டந்தோறும் அனைத்து வசதிகளுடன் கூடிய முதியோர் இல்லங்கள் அமைக்கப்படும் என்றும், முதல் கட்டமாக 12 மாவட்டங்களில் தலா 40 பயனாளிகள் தங்கக்கூடிய 12 முதியோர் இல்லங்கள் ரூ.68 கோடி செலவில் உருவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நூலகம், யோகா, தியானம் மற்றும் உள்ளரங்க விளையாட்டு வசதிகளுடன் கூடிய மூத்த குடிமக்கள் பொழுதுபோக்கு மையங்கள் முதல் கட்டமாக ஐந்து மாவட்டங்களில் தொடங்கப்படவுள்ளன.
குழந்தைகள் நலனை மேம்படுத்தும் வகையில், பாதுகாப்பான குடிநீர், கழிவறை, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளுடன் 500 புதிய அங்கன்வாடி மையக் கட்டிடங்கள் நடப்பாண்டில் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திருநர்களின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக திறன் பயிற்சி, சுயதொழில் தொடங்க மானியத்துடன் கூடிய வங்கிக் கடன், பாதுகாப்பான தங்குமிடங்கள் மற்றும் குறுகியகால தங்குமிட வசதிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த அனைத்து நலத்திட்டங்களையும் செயல்படுத்தும் வகையில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைக்கு திருத்த வரவு-செலவுத் திட்டத்தில் ரூ.9,818 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பெண்கள், குழந்தைகள், முதியோர் மற்றும் திருநர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் இந்த அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளதாகவும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



