வெற்றி வீடு திட்டம் அறிமுகம்: கிராமப்புற ஏழைகளுக்கு 70 ஆயிரம் கான்கிரீட் வீடுகள் கட்ட ரூ.3,500 கோடி ஒதுக்கீடு
தமிழக பட்ஜெட் 2026-ல் கிராமப்புறங்களில் குடிசை வீடுகளில் வசிக்கும் ஏழை குடும்பங்களுக்கு நிரந்தர வீட்டு வசதி ஏற்படுத்தும் நோக்கில் புதிய “வெற்றி வீடு திட்டம்” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் முதல் கட்டமாக 70 ஆயிரம் கான்கிரீட் வீடுகள் கட்ட ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட் உரையில் அறிவித்தார். கிராமப்புற வறுமையை குறைத்து, அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் கண்ணியமான குடியிருப்பு வழங்குவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
பட்ஜெட் உரையில், கடந்த பல ஆண்டுகளாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு வீட்டுவசதித் திட்டங்களை செயல்படுத்தியிருந்தாலும், தமிழ்நாடு இன்னும் முழுமையாக குடிசைகள் அற்ற மாநிலமாக மாறவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. போதுமான நிதி இல்லாமை, பயனாளிகள் தேர்வில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் கிராமப்புறங்களில் நிலப் பற்றாக்குறை போன்ற காரணங்களால் பல தகுதியான குடும்பங்கள் வீட்டு வசதி திட்டங்களிலிருந்து விலகியுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இந்தக் குறைகளை சரிசெய்யும் வகையிலேயே மாநிலத்தின் புதிய வீட்டுவசதி திட்டமாக “வெற்றி வீடு திட்டம்” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சமாக, வீடு ஒன்றிற்கான நிதியுதவி ரூ.3.10 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், கூடுதல் செலவை ஏற்க முடியாத மிகவும் ஏழை குடும்பங்களும் கான்கிரீட் வீடுகளை கட்டும் வாய்ப்பைப் பெறுவார்கள் என அரசு தெரிவித்துள்ளது. மேலும், திட்டத்தின் பயனாளிகளை துல்லியமாக அடையாளம் காண ஊரக வளர்ச்சித் துறை சார்பில் வீடுதோறும் புதிய கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன், ஊரக வளர்ச்சித் துறையின் அனைத்து உள்கட்டமைப்புத் திட்டங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் “தமிழ்நாடு கிராமப்புற அதிகாரமளித்தல், மாற்றம் மற்றும் மறுமலர்ச்சி முன்னெடுப்பு (TN-VETRI)” என்ற புதிய விரிவான திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் குடிநீர் வசதி, திடக்கழிவு மேலாண்மை, சுகாதாரம், கிராமப்புற இணைப்புச் சாலைகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளன.
மேலும், நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள ஊராட்சிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.1,000 கோடி ஒதுக்கீட்டில் தனித்திட்டமும், மலைப்பகுதி ஊராட்சிகளின் வளர்ச்சிக்காக ஆண்டுதோறும் ரூ.100 கோடி நிதியுடன் மற்றொரு சிறப்புத் திட்டமும் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு மொத்தம் ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படவுள்ள TN-VETRI திட்டம், மாநிலத்தின் பல்வேறு துறைகள் மற்றும் மத்திய அரசுத் திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படும் என்றும், இதனை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் தலைமையிலான உயர்மட்டக் குழு கண்காணிக்கும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



