டாஸ்மாக் முறைகேடு வழக்கில் விசாரணை தீவிரம்; மேலும் சிலரை கைது செய்ய லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடவடிக்கை
டாஸ்மாக் நிறுவனத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் வழக்கின் விசாரணை தீவிரமடைந்துள்ளது. ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் கிடைத்த தகவல்கள் மற்றும் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்ய லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடவடிக்கைகளை விரைவுபடுத்தியுள்ளனர்.
2021 முதல் 2025ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் டாஸ்மாக் நிறுவனத்தின் கொள்முதல், டெண்டர் ஒதுக்கீடு மற்றும் நிர்வாக நடவடிக்கைகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, சென்னை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடந்த மாதம் 28ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னாள் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் எஸ். விசாகன் ஐஏஎஸ், அதிகாரிகள் ராமதுரை முருகன், பன்னீர்செல்வம், பாஸ்கர் உள்ளிட்டோர் மற்றும் செந்தில் பாலாஜியின் நெருங்கிய தொடர்புடையவர்களாகக் கூறப்படும் ரதேஷ், கார்த்திக் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. மேலும், மதுபான உற்பத்தி நிறுவனங்கள், சரக்கு உரிமம் பெற்ற நிறுவனங்கள், பாட்டில் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் அடையாளம் தெரியாத சில அரசு ஊழியர்களும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வழக்குப் பதிவு செய்யப்பட்ட மறுநாளே, தமிழகம் முழுவதும் 45 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களை கைப்பற்றினர். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களாகக் கூறப்படும் கரூரைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடமிருந்து கிடைத்த வாக்குமூலங்கள், வங்கி பரிவர்த்தனை விவரங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்கள் அடிப்படையில், மேலும் சிலரின் தொடர்பு குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையில், இந்த வழக்கில் கைது நடவடிக்கைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவருக்கு முன்ஜாமீன் வழங்கியுள்ளது. அதேசமயம், விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும், சாட்சிகளை பாதிக்கவோ ஆதாரங்களை கலைக்கவோ கூடாது என்ற நிபந்தனைகளையும் விதித்துள்ளது. வழக்கின் தற்போதைய நிலை குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் கூறுகையில், விசாரணை சரியான திசையில் முன்னேறி வருவதாகவும், முறைகேட்டில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.



