மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 ஆக உயர்த்த நடவடிக்கை: அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவிப்பு
மகளிருக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார். இந்த உயர்த்தப்பட்ட தொகை விரைவில் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு 3,428 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கீர்த்தனா, விருதுநகர் மாவட்டத்தில் வெற்றி பெற்றுள்ள தாங்கள் நால்வரும் மாவட்ட மக்களின் நலனுக்காக இணைந்து செயல்படும் நான்கு தூண்களாக இருப்போம் என தெரிவித்தார். மக்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளை நிறைவேற்ற தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி, தங்களுக்குள் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என்றும், அமைச்சர் கீர்த்தனாவுடன் இணைந்து மக்கள் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார். ஆளும் கட்சி மட்டுமின்றி எதிர்க்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுடனும் இணைந்து விருதுநகர் மக்களின் தேவைகளை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், தற்போது வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகையை மாதம் ரூ.2,500 ஆக உயர்த்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்தார்.
இதனிடையே, மக்கள் தங்களது கோரிக்கைகளை எளிதாக தெரிவிக்கும் வகையில் ‘விஜய் விஜயம்’ என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு நேரில் வராமல், இந்த செயலி மூலம் கோரிக்கைகளை பதிவு செய்யலாம் என்றும், 24 மணி நேரத்திற்குள் அதற்கான பதில் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த சேவை விரைவில் சிவகாசி உள்ளிட்ட பிற தொகுதிகளிலும் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பின்னர், விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கில் புதிதாக அமைக்கப்பட்ட கிரிக்கெட் உள் விளையாட்டு அரங்கத்தை அமைச்சர்கள் திறந்து வைத்தனர். இதற்கு முன்பாக சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் நிவாரண நிதிக்கான காசோலைகளையும் வழங்கி ஆறுதல் தெரிவித்தனர்.



