கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் நோயாளி தாக்குதல்: சிகிச்சை பெற்ற மற்றொரு கைதி உயிரிழப்பு
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தின் சிறைக் கைதிகள் சிகிச்சைப் பிரிவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில், பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நோயாளி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் 750-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறைகளில் மனநல பாதிப்புக்குள்ளாகும் விசாரணைக் கைதிகள் மற்றும் தண்டனைக் கைதிகள் நீதிமன்ற உத்தரவின் பேரில் இங்கு அனுப்பப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். அவர்களுக்கென தனிப்பட்ட சிறைக் கைதிகள் வார்டு செயல்பட்டு வருகிறது.
கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 20 வயது விசாரணைக் கைதி ஒருவர், தீவிர மனச்சிதைவு மற்றும் தற்கொலை எண்ணம் தொடர்பான பாதிப்புகளால் கடந்த சில மாதங்களாக அந்த வார்டில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த 20-ஆம் தேதி காலை அவர், அதே வார்டில் இருந்த ஜாஹிர் என்ற நோயாளியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த ஜாஹிர், உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்தார்.
உயிரிழந்த ஜாஹிர் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி என்றும், மனநல பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு மற்றொரு நபரை தாக்கி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், நீதிமன்ற உத்தரவின் பேரில் மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தாக்குதல் நடத்திய நபரும் தனது தாயைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் விளக்கமளிக்கையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் சிகிச்சை பெற்று வந்த இரு விசாரணைக் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலே உயிரிழப்புக்கு காரணமாக அமைந்ததாக தெரிவித்தார். மேலும், கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வரும் அனைத்து நோயாளிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமையாகும் என்றும், பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து வலுப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.



