எப்ஐஹெச் ஹாக்கி உலகக் கோப்பை இன்று தொடக்கம்: பட்டம் வெல்ல 32 அணிகள் பலப்பரீட்சை
எப்ஐஹெச் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. வரும் 30-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடரில், ஆடவர் பிரிவில் 16 அணிகளும், மகளிர் பிரிவில் 16 அணிகளும் என மொத்தம் 32 அணிகள் உலகக் கோப்பையை கைப்பற்றும் நோக்கில் களமிறங்குகின்றன.
தொடரில் பங்கேற்கும் அணிகள் தலா 4 அணிகள் கொண்ட 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் இந்திய அணி ‘டி’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. ஆடவர் பிரிவில் ‘ஏ’ பிரிவில் நெதர்லாந்து, அர்ஜெண்டினா, நியூஸிலாந்து, ஜப்பான் அணிகளும், ‘பி’ பிரிவில் பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், மலேசியா அணிகளும் இடம் பெற்றுள்ளன.
‘சி’ பிரிவில் ஆஸ்திரேலியா, ஸ்பெயின், அயர்லாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் இடம்பெற்றுள்ளன. ‘டி’ பிரிவில் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், வேல்ஸ் அணிகள் இடம் பிடித்துள்ளன. இதேபோல் மகளிர் பிரிவில் ‘ஏ’ பிரிவில் நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, சிலி, ஜப்பான் அணிகளும், ‘பி’ பிரிவில் அர்ஜெண்டினா, ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்காட்லாந்து அணிகளும் உள்ளன.
மகளிர் பிரிவின் ‘சி’ பிரிவில் பெல்ஜியம், ஸ்பெயின், நியூஸிலாந்து, அயர்லாந்து அணிகளும், ‘டி’ பிரிவில் சீனா, இங்கிலாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளும் இடம்பெற்றுள்ளன. போட்டிகள் லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெறுகின்றன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும்.
லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும். இவ்வாறு தகுதி பெறும் 8 அணிகள் ‘இ’ மற்றும் ‘எஃப்’ என இரு பிரிவுகளாக பிரிக்கப்படும். ‘இ’ பிரிவில் ஏ மற்றும் டி பிரிவுகளில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இடம்பெறும். ‘எஃப்’ பிரிவில் பி மற்றும் சி பிரிவுகளில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இடம்பெறும்.
இந்த இரு பிரிவுகளிலும் உள்ள அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோதும். அதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இதன் பின்னர் நாக் அவுட் சுற்றுகள் மூலம் உலகக் கோப்பை சாம்பியன் யார் என்பது தீர்மானிக்கப்படும்.
ஆடவர் பிரிவில் ‘டி’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் இன்று 15-ம் தேதி வேல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து 17-ம் தேதி இங்கிலாந்துடனும், 19-ம் தேதி பாகிஸ்தானுடனும் இந்திய அணி மோதுகிறது.
மகளிர் பிரிவில் இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் நாளை 16-ம் தேதி சீனாவை எதிர்கொள்கிறது. தொடர்ந்து 18-ம் தேதி தென் ஆப்பிரிக்காவையும், 20-ம் தேதி இங்கிலாந்தையும் இந்திய மகளிர் அணி சந்திக்கிறது.
மகளிர் பிரிவுக்கான அரையிறுதி ஆட்டங்கள் 27-ம் தேதி நடைபெற உள்ளன. உலக சாம்பியனை தீர்மானிக்கும் மகளிர் இறுதிப்போட்டி 29-ம் தேதி நடைபெறுகிறது. ஆடவர் பிரிவில் அரையிறுதி ஆட்டங்கள் 28-ம் தேதியும், பரபரப்பை ஏற்படுத்தும் இறுதிப்போட்டி 30-ம் தேதியும் நடைபெற உள்ளது.



