ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சை சமாளிக்குமா வங்கதேசம்? முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்
ஆஸ்திரேலியா – வங்கதேசம் அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் இன்று டார்வினில் உள்ள மராரா மைதானத்தில் தொடங்குகிறது. இந்திய நேரப்படி காலை 6 மணிக்கு போட்டி தொடங்க உள்ள நிலையில், வலுவான ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வங்கதேச அணி எவ்வாறு செயல்படப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆஸ்திரேலிய அணியில் ‘பிக் ஃபோர்’ என அழைக்கப்படும் கேப்டன் பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், நேதன் லயன் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் காயங்களில் இருந்து மீண்டு மீண்டும் ஒரே அணியாக களமிறங்க உள்ளனர். இவர்களுடன் ஸ்காட் போலந்தும் வேகப்பந்துவீச்சில் கூடுதல் பலத்தை அளிக்கக்கூடும். ஆல்ரவுண்டர்கள் வரிசையில் கேமரூன் கிரீன் மற்றும் பியூ வெப்ஸ்டர் இடம் பெற்றுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் பேட்டிங் வரிசையிலும் வலுவான வீரர்கள் உள்ளனர். டிராவிஸ் ஹெட்டுடன் ஜேக் வெதரால்ட் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்புள்ளது. இதையடுத்து ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்னஸ் லபுஷேன் 3 மற்றும் 4-வது இடங்களில் அணிக்கு உறுதியான அடித்தளத்தை வழங்கக்கூடும். இதனால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரு துறைகளிலும் ஆஸ்திரேலிய அணி பலத்துடன் காணப்படுகிறது.
மறுபுறம், வங்கதேச அணிக்கு இந்த தொடருக்கு முன்னதாகவே பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பயிற்சி ஆட்டத்தில் அந்த அணி வெறும் 54 ரன்களுக்கு ஆட்டமிழந்ததுடன், இன்னிங்ஸ் மற்றும் 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியையும் சந்தித்தது. முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான நஹித் ராணா, முஸ்டாபிஸுர் ரஹ்மான் மற்றும் ஷோரிபுல் இஸ்லாம் ஆகியோர் காயம் காரணமாக விளையாடாதது அணியின் பந்துவீச்சு பலத்தை பாதித்துள்ளது.
மேலும், அனுபவம் வாய்ந்த பேட்டர் முஸ்பிகுர் ரஹிம் கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த தொடரில் பங்கேற்கவில்லை. முன்னணி வீரர்களின் விலகல் காரணமாக பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரு துறைகளிலும் வங்கதேச அணி சவாலை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வலுவான ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அந்த அணி தாக்குப்பிடிக்குமா என்பது போட்டியின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.
இதற்கிடையே, அடுத்த 12 மாதங்களில் ஆஸ்திரேலிய அணி மொத்தம் 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளைத் தொடர்ந்து, வரும் அக்டோபரில் தென் ஆப்பிரிக்கா செல்லும் ஆஸ்திரேலியா அங்கு 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. அதன் பின்னர் நியூஸிலாந்துக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
அதன்பிறகு இந்தியாவுக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகளிலும், இங்கிலாந்துக்கு எதிராக பகலிரவு டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி களமிறங்க உள்ளது. ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டிகளின் 150 ஆண்டுகால கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்த பகலிரவு டெஸ்ட் போட்டி நடத்தப்படுகிறது. மெல்பர்ன் மைதானத்தில் 2027-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள இந்த போட்டியைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து சென்று ஆஷஸ் தொடரிலும் விளையாட உள்ளது.



