30 அணிகள் பங்கேற்கும் மகளிர் ஜூனியர் தேசிய ஹாக்கி போட்டி இன்று புனேவில் தொடக்கம்
மகளிருக்கான 16-வது ஜூனியர் தேசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டி புனேவில் இன்று தொடங்குகிறது. வரும் 23-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்தத் தொடரில் மொத்தம் 30 அணிகள் பங்கேற்கின்றன. போட்டிகள் ‘ஏ’, ‘பி’, ‘சி’ என மூன்று டிவிஷன்களாகப் பிரிக்கப்பட்டு நடத்தப்பட உள்ளன.
சாம்பியன் பட்டத்துக்கான ‘ஏ’ டிவிஷனில் 12 அணிகள் இடம்பெற்றுள்ளன. இவை நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் ஜார்க்கண்ட், பஞ்சாப், சண்டிகர் அணிகளும், ‘பி’ பிரிவில் ஹரியாணா, ஒடிசா, பெங்கால் அணிகளும் இடம்பெற்றுள்ளன.
‘சி’ பிரிவில் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர் அணிகளும், ‘டி’ பிரிவில் சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், இமாச்சலப்பிரதேசம் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ‘ஏ’ டிவிஷன் போட்டிகள் வரும் 16-ஆம் தேதி முதல் தொடங்குகின்றன.
லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெறும். காலிறுதி ஆட்டங்கள் வரும் 20-ஆம் தேதியும், அரையிறுதி போட்டிகள் 21-ஆம் தேதியும் நடைபெற உள்ளன. தொடரின் இறுதிப்போட்டி வரும் 23-ஆம் தேதி நடைபெறுகிறது.
‘ஏ’ டிவிஷனில் 11 மற்றும் 12-வது இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்த ஆண்டு நடைபெறும் போட்டியில் ‘பி’ டிவிஷனுக்கு தகுதி இறக்கம் செய்யப்படும். இதேபோல், ‘பி’ டிவிஷனில் சிறப்பாக செயல்படும் அணிகளுக்கு ‘ஏ’ டிவிஷனுக்கு முன்னேறும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
‘பி’ டிவிஷனில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இவை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் ஆந்திரா, அசாம், டெல்லி, கேரளா, மிசோரம் அணிகளும், ‘பி’ பிரிவில் கர்நாடகா, உத்தராகண்ட், தமிழ்நாடு, பிஹார், கோவா அணிகளும் இடம்பெற்றுள்ளன.
‘பி’ டிவிஷன் லீக் சுற்றின் முடிவில் இரு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் ‘ஏ’ டிவிஷனுக்கு தரம் உயர்த்தப்படும். அதே நேரத்தில் கடைசி இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்த ஆண்டு ‘சி’ டிவிஷனுக்கு தகுதி இறக்கம் செய்யப்படும்.
‘சி’ டிவிஷனில் 8 அணிகள் பங்கேற்கின்றன. இவை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் அருணாச்சலப்பிரதேசம், தாத்ரா & நாகர் ஹவேலி மற்றும் டையூ டாமன், ராஜஸ்தான், திரிபுரா அணிகளும், ‘பி’ பிரிவில் புதுச்சேரி, குஜராத், ஜம்மு & காஷ்மீர், தெலங்கானா அணிகளும் இடம்பெற்றுள்ளன.
‘சி’ டிவிஷனிலும் லீக் சுற்றின் முடிவில் சிறப்பாக விளையாடி முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் ‘பி’ டிவிஷனுக்கு முன்னேறும். இதனால் 30 அணிகளும் தங்களது பிரிவுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தகட்ட டிவிஷனுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை எதிர்நோக்கியுள்ளன.



