யு-19 உலக தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்று ஆஷிஸ் யாதவ் சாதனை
அமெரிக்காவின் யூஜின் நகரில் நடைபெற்று வரும் யு-19 உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் ஆஷிஸ் யாதவ் 74.09 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் யான்-ஹென்ட்ரிக் ஹேமன்ஸ் 80.50 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். டொமினிகா வீரர் அடிசன் ஜேம்ஸ் 73.89 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். தமிழகத்தைச் சேர்ந்த தரணிதரன் 72.35 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து 6-வது இடத்தைப் பிடித்தார்.
19 வயதான ஆஷிஸ் யாதவ், யு-19 உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் ஈட்டி எறிதலில் பதக்கம் வென்ற 2-வது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன்பு ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, 2016-ம் ஆண்டு போலந்தில் நடைபெற்ற யு-19 போட்டியில் 86.48 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.
உலக ஜூனியர் அரங்கில் நீரஜ் சோப்ரா எறிந்த 86.48 மீட்டர் தூரமே இன்றளவும் சாதனையாக நீடித்து வருகிறது. இந்நிலையில், ஆஷிஸ் யாதவ் வெள்ளிப் பதக்கம் வென்றிருப்பது இந்திய தடகளத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த சாதனையாக பார்க்கப்படுகிறது.
இதனிடையே, மகளிருக்கான உயரம் தாண்டுதலில் இந்தியாவின் பூஜா சிங் 1.79 மீட்டர் உயரம் தாண்டி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். ஆடவருக்கான நீளம் தாண்டுதல் தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஷாநவாஸ் கான் 7.73 மீட்டரும், ஜித்தின் அர்ஜுனா 7.57 மீட்டரும் தாண்டி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.



