இ20 பெட்ரோல் விவகாரம்: எதிர்ப்பாளர்களை விமர்சித்த பாஜக எம்.பி. கருத்தால் புதிய சர்ச்சை
பெட்ரோலில் எத்தனாலை கலந்து விற்பனை செய்யும் மத்திய அரசின் இ20 பெட்ரோல் கொள்கைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பாஜக எம்.பி. ஜனார்த்தன் மிஸ்ரா தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, இ20 பெட்ரோல் பாதுகாப்பானது என்றும், இதனை பயன்படுத்துவதால் பாதிப்பு இல்லை என்றும் மத்திய அரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறது.
இ20 பெட்ரோல் தொடர்பாக பேசிய ஜனார்த்தன் மிஸ்ரா, நாட்டின் கச்சா எண்ணெய் தேவையில் பெரும்பகுதி இறக்குமதி மூலமாகவே பூர்த்தி செய்யப்படுவதாக குறிப்பிட்டார். சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெயை சரக்கு கப்பல்கள் மூலம் கொண்டு வருவதில் சவால்கள் ஏற்பட்டுள்ளதாகவும், சில நேரங்களில் பாதுகாப்பான கடல் வழித்தடத்தைத் தேர்வு செய்வதற்காக கூடுதலாக 18,000 கிலோமீட்டர் வரை பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த சூழ்நிலையில்தான் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, பெட்ரோலுடன் 20 சதவீத எத்தனாலை கலக்கும் கொள்கையை முன்னெடுத்ததாக ஜனார்த்தன் மிஸ்ரா கூறினார். இந்தக் கொள்கைக்கு எதிராக சிலர் விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் தெரிவித்து வருவதாகவும், ‘இ20 பெட்ரோல் வேண்டாம்’, ‘தூய பெட்ரோல் வேண்டும்’ என சிலர் இயக்கங்களை தொடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், வாகனங்களுக்கு தூய பெட்ரோல் மட்டுமே பொருத்தமானது என எதிர்ப்பாளர்கள் கூறுவதாக குறிப்பிட்ட ஜனார்த்தன் மிஸ்ரா, இதுதொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். நாட்டில் தூய பெட்ரோல் எங்கும் கிடைக்கிறதா என்றும், அவ்வாறு இருக்கும் நிலையில் தூய பெட்ரோல் எங்கிருந்து கிடைக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
எத்தனால் எரிபொருளை பிரேசில் வெற்றிகரமாக பயன்படுத்தி வருவதாகவும், எத்தனால் கலந்த பெட்ரோலை வாகனங்களில் பயன்படுத்துவதால் பாதிப்பு ஏற்படாது என இந்திய வல்லுநர்கள் தெரிவித்துள்ளதாகவும் ஜனார்த்தன் மிஸ்ரா கூறினார். எனவே, இ20 பெட்ரோல் கொள்கையை எதிர்ப்பது தேவையற்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இ20 பெட்ரோல் என்றால் என்ன?
பெட்ரோலுடன் 20 சதவீத எத்தனாலை கலந்து வாகன எரிபொருளாக பயன்படுத்தப்படுவது இ20 பெட்ரோல் எனப்படுகிறது. இதன் மூலம் மாசு குறைவதுடன், கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக செலவிடப்படும் தொகையை கட்டுப்படுத்த முடியும் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், அந்நியச் செலாவணியை சேமிக்கவும், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தவும் இது உதவும் என கூறப்படுகிறது.
இந்தியாவில் பெட்ரோலில் எத்தனால் கலப்பது 2014-ம் ஆண்டு 1.4 சதவீத எத்தனால் கலவையுடன் தொடங்கியது. பின்னர் 10 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை அறிமுகப்படுத்துவதற்கு 2022 நவம்பர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு முன்பாகவே அந்த இலக்கு எட்டப்பட்டது.
அடுத்த கட்டமாக 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை 2030-ம் ஆண்டில் அறிமுகப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், அந்த இலக்குக்கு முன்னதாகவே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவில் இ20 பெட்ரோல் விற்பனை தொடங்கியது.



