பழநி ரூ.100 கோடி நிலமோசடி வழக்கில் தொடரும் மர்மங்கள்: நயினார் நாகேந்திரன் புகார்
பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலமோசடி வழக்கில் தொடர்ந்து எழுந்துவரும் சந்தேகங்கள் குறித்து உரிய முறையில் விசாரணை நடத்த தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.
அந்தப் பதிவில், பழநி நிலமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அன்வர்தீன் நெஞ்சுவலி காரணமாக திடீரென உயிரிழந்ததாகவும், வழக்குடன் தொடர்புடைய சார் பதிவாளர் மணிகண்டன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியையும் பல்வேறு சந்தேகங்களையும் ஏற்படுத்துவதாக நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பாக முழுமையான மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படும் நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அன்வர்தீனுக்கு மட்டும் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது எப்படி என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், வழக்கின் முக்கிய சாட்சியங்களாகக் கருதப்படும் இருவருக்கும் ஒரே நேரத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பது குறித்தும் முறையான விசாரணை தேவை என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், காவல் நிலையங்கள் மற்றும் சிறைகளில் உள்ள குற்றவாளிகள் அதிகாரிகளால் தாக்கப்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டியுள்ள நயினார் நாகேந்திரன், அன்வர்தீனின் மரணத்தை இயற்கையான நிகழ்வாக மட்டும் கருதி கடந்து செல்ல முடியாது என்றும் தெரிவித்துள்ளார். அவர் உயிரிழந்தபோது பணியில் இருந்த அனைத்து சிறைக் காவல் அதிகாரிகளையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அன்வர்தீனின் மரணத்திற்கான உண்மையான பின்னணி என்ன என்பதையும், பழநி நிலமோசடி வழக்கில் தொடர்ந்து எழுந்துவரும் சந்தேகங்களையும் முழுமையாக விசாரிக்க முதல்வர் விஜய் உத்தரவிட வேண்டும் எனவும் நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார். அதேபோல், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சார் பதிவாளர் மணிகண்டனுக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் கிடைப்பதை அரசு உறுதி செய்து, அவருக்கு உரிய பாதுகாப்பையும் வழங்க வேண்டும் என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.



