காசோலை மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார் செப். 10-ல் ஆஜராக சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு
காசோலை மோசடி தொடர்பான வழக்கில் நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமார் செப்டம்பர் 10-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
நடிகர் சரத்குமார் தனது கடன்களை அடைப்பதற்காக, சென்னையைச் சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணா என்பவரிடம் கடந்த 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ.2 கோடி கடன் பெற்றதாக கூறப்படுகிறது. பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவதற்காக சரத்குமார் வழங்கிய காசோலையை ஸ்ரீகிருஷ்ணா வங்கியில் செலுத்தியுள்ளார்.
ஆனால், அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது, சம்பந்தப்பட்ட கணக்கில் போதிய பணம் இல்லாததால் காசோலை திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, காசோலை மோசடி தொடர்பாக நடிகர் சரத்குமாருக்கு எதிராக ஸ்ரீகிருஷ்ணா சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், செப்டம்பர் 10-ஆம் தேதி நடிகர் சரத்குமார் நேரில் ஆஜராகும் வகையில் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இதனால், காசோலை மோசடி வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை செப்டம்பர் 10-ஆம் தேதி நடைபெற உள்ளது.



