முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயன் மீது விசாரணைக்கு உத்தரவு
தமிழக முதல்வர் விஜய் குறித்து திமுக எம்எல்ஏ மார்கண்டேயன் அவதூறாகப் பேசியதாக எழுந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த சட்டப்பேரவை உரிமை மீறல் குழுவுக்கு பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரம் சட்டப்பேரவையில் நடைபெற்ற பட்ஜெட் விவாதத்தின்போது பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றபோது, விளாத்திகுளம் தொகுதி எம்எல்ஏ மார்கண்டேயன் அரசின் பட்ஜெட் குறித்து விமர்சனம் செய்தார். மேலும், பாரதிதாசன் தொடர்பாக அமைச்சர் பேசியதை குறிப்பிட்டு சில கருத்துகளை தெரிவித்த அவர், சிறை தொடர்பாகவும் அவையில் பேசினார்.
இதற்கு அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் எதிர்ப்பு தெரிவித்தார். உறுப்பினர் சிறைக்குச் சென்றது தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால், அந்த விவகாரம் குறித்து அவையில் பேச வேண்டாம் எனக் கூறிய அவர், முதல்வர் குறித்து உறுப்பினர் தெரிவித்த கருத்துகளுக்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையடுத்து பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர், முதல்வர் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறப்படும் விவகாரத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கடிதம் அளித்துள்ளதாக தெரிவித்தார். பொதுவெளியில் தெரிவிக்கப்பட்ட அந்தப் பேச்சு பலருக்கும் மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், ஆபாசமான மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையிலான பேச்சுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இதுபோன்ற பேச்சுகளை சம்பந்தப்பட்ட கட்சிகளின் தலைவர்கள் முதலில் கண்டிக்க வேண்டும் என்றும் பேரவைத் தலைவர் தெரிவித்தார். மார்கண்டேயனின் பேச்சு தொடர்பாக விசாரணை நடத்தும் வகையில், அந்த விவகாரத்தை சட்டப்பேரவை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பி வைப்பதாகவும் அவர் அறிவித்தார்.
இதற்கு திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு எதிர்ப்பு தெரிவித்தார். மார்கண்டேயன் ஏற்கெனவே சிறைக்குச் சென்றுள்ள நிலையில், சட்டப்பேரவையில் அவர் பேசியதை மட்டும் அடிப்படையாகக் கொண்டு உரிமை மீறல் குழுவுக்கு அனுப்புவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றார். ஒரே விவகாரம் தொடர்பாக இரண்டு இடங்களில் விசாரணை நடத்தி தண்டனை வழங்குவது முறையாகாது என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த பேரவைத் தலைவர் பிரபாகர், விவகாரத்தை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பி விசாரணை நடத்தப்படும் என்றும், விசாரணை முடிந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
இதனிடையே, தனது பேச்சு குறித்து விளக்கம் அளித்த எம்எல்ஏ மார்கண்டேயன், முதல்வர் குறித்து பேசியது தவறு என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தமக்கு அறிவுறுத்தியதாக தெரிவித்தார். எனவே, தன்னை அறியாமல் வெளிப்பட்ட அந்த வார்த்தைகளை பேரவைத் தலைவர் அருள்கூர்ந்து மறந்துவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.



