திருவண்ணாமலைக்கு இன்று அமித் ஷா வருகை: தீவிரப்படுத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று திருவண்ணாமலைக்கு வருகை தர உள்ளதை முன்னிட்டு, மாவட்டத்தில் பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அவரது வருகையையொட்டி ஹெலிகாப்டர் தரையிறங்கும் தளம், கோயில் மற்றும் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அமித் ஷா இன்று மாலை சென்னை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலைக்கு புறப்பட உள்ளார். திருவண்ணாமலை – செங்கம் சாலையில் உள்ள கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் அவர் தரையிறங்க உள்ளார்.
அதனைத் தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் ரமண மகரிஷி ஆசிரமத்துக்கு அமித் ஷா செல்ல உள்ளார். அங்கு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு அண்ணாமலையார் கோயிலுக்குச் செல்ல உள்ளார். கோயிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்ட பிறகு, சாலை மார்க்கமாக புதுச்சேரிக்கு புறப்படுகிறார்.
புதுச்சேரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் காவல் துறையினருக்கு விருதுகளை வழங்கி அமித் ஷா உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அவரது பயணத் திட்டம் மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அமித் ஷாவின் வருகையை முன்னிட்டு, ஹெலிகாப்டர் தரையிறங்கும் தளத்தில் மத்திய உள்துறை பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் ஆய்வு மேற்கொண்டனர். ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டு பாதுகாப்பு தொடர்பான சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், அண்ணாமலையார் கோயில் வளாகத்திலும் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அமித் ஷாவின் வருகையை முன்னிட்டு திருவண்ணாமலை நகரில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக முக்கிய பகுதிகளில் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.



