மத்திய அரசின் வரி நிதி பகிர்வில் தமிழகத்திற்கு நியாயமான பங்கு கோரி தீர்மானம் – பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
தமிழகத்திற்கு மத்திய அரசு உரிய நிதிப் பகிர்வை வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தனி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தை நிதியமைச்சர் மரிய வில்சன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். மத்திய அரசு வசூலிக்கும் வரிகளில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிதிப் பங்கு முறையாக வழங்கப்பட வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாநிலங்களின் பொருளாதார பங்களிப்பு, நிதி மேலாண்மை திறன், நல்லாட்சி செயல்பாடு மற்றும் வளர்ச்சி தேவைகளை கருத்தில் கொண்டு, மத்திய வரி பகிர்வு முறை வெளிப்படையான, நியாயமான மற்றும் சமமான அடிப்படையில் இருக்க வேண்டும் என தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மக்கள் தொகை கட்டுப்பாடு, மனிதவள மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், மத்திய வரி பகிர்வுக்கான அளவுகோல்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் மத்திய வரி பகிர்வு தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் போது, தமிழகத்தின் நியாயமான நிதி உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தை வரவேற்று பேசிய திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு, தற்போது மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கும் வரி பகிர்வு 41 சதவீதமாக உள்ளதாகவும், அதை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என தீர்மானத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அதேபோல், அதிமுக சட்டப்பேரவைக் குழுத் தலைவர் பழனிசாமியும் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.
இதையடுத்து, நிதியமைச்சர் மரிய வில்சன் முன்மொழிந்த தனி தீர்மானம், சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.



