அரசு மற்றும் பொதுத்துறை சேவைகளை தனியார்மயமாக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
தமிழகத்தில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் சேவைகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இத்தகைய நடவடிக்கைகள் சமூகநீதி மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்பை பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இளைய தலைமுறையின் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த தவெக அரசு, இளைஞர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும் வகையில் அரசு வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு மாறாக அரசின் பல்வேறு சேவைகள் தனியார்மயமாக்கப்பட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில், தனியார் கூட்டாண்மை மூலம் செயல்படுத்தப்படும் 5 முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக அன்புமணி குறிப்பிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் மின்சார பேருந்துகளை தனியார் நிறுவனங்கள் மூலம் இயக்குதல், மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த விடுதிகள் அமைத்தல், கோவை – அரியலூர் இடையே ரூ.4,000 கோடி மதிப்பிலான மின்வழித்தடம் அமைத்தல், 20 ஆயிரம் இடங்களில் மின்சார வாகன சார்ஜிங் மையங்கள் உருவாக்குதல், சென்னையில் ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பில் ஒரு லட்சம் வீடுகள் கட்டுதல் உள்ளிட்ட திட்டங்கள் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மின்சார பேருந்துகளை தனியார் நிறுவனங்கள் மூலம் இயக்கும் திட்டம் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளதாகவும், தற்போது 625 மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், நடப்பு ஆண்டில் மேலும் 1,000 பேருந்துகள் சேர்க்கப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த திட்டம் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டால், எதிர்காலத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்களில் வேலைவாய்ப்புகள் குறையும் அபாயம் இருப்பதாகவும் அன்புமணி தெரிவித்துள்ளார்.
தனியார் நிறுவனங்கள் பேருந்துகளை இயக்குவதுடன், ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உள்ளிட்ட பணியாளர்களையும் அவர்களே நியமித்துக் கொள்வார்கள் என்பதால், அரசு போக்குவரத்துத் துறையில் புதிய நியமனங்கள் பாதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேபோன்று மற்ற துறைகளிலும் தனியார் பங்களிப்பு அதிகரித்தால், அரசுத் துறைகளில் வேலைவாய்ப்புகள் குறையும் சூழல் உருவாகும் என அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், ஏற்கனவே போக்குவரத்து, மின்சாரம், உயர்கல்வி மற்றும் நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்கள் நியமிக்கப்படுவதாகவும், இதில் பணியாளர்களின் ஊதியம் மற்றும் உரிமைகள் பாதிக்கப்படுவதாகவும் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.
அரசு மற்றும் பொதுத்துறை சேவைகள் முழுமையாக தனியார்மயமாக்கப்பட்டால், அந்த துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகள் அனைத்தும் பாதிக்கப்படும் என்றும், தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படாது என்பதால் சமூகநீதிக்கும் பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழக அரசின் வருவாய் மேம்பாட்டுக் குழு தலைவராக முன்னாள் திட்டக்குழு துணைத் தலைவர் மாண்டெக் சிங் அலுவாலியா நியமிக்கப்பட்டிருப்பது குறித்து கவலை தெரிவித்த அன்புமணி, சீர்திருத்தம் என்ற பெயரில் தனியார்மயமாக்கல் நடவடிக்கைகள் அதிகரிக்கலாம் என்ற அச்சம் இருப்பதாக கூறியுள்ளார்.
இளைஞர்களின் ஆதரவால் ஆட்சிக்கு வந்துள்ள தமிழக அரசு, அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும், தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
எனவே, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன சேவைகளை தனியார்மயமாக்கும் அறிவிப்புகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், அரசுத் துறைகளில் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் உள்ள 6 லட்சம் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.



