தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: தமிழக எம்.பி.க்களுடன் ஆகஸ்ட் 8-ல் முதல்வர் விஜய் ஆலோசனை
ஒன்றிய அரசு மேற்கொள்ள திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, தமிழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்த உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்தக் கூட்டத்தில் தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஒன்றிய அரசு நாடாளுமன்ற தொகுதிகளை மறுவரையறை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தின் நிலைப்பாடு மற்றும் எதிர்கால பாதிப்புகள் குறித்து ஆலோசனை நடத்த முதல்வர் விஜய் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கலந்தாய்வுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டம் வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தின் 3-ம் தள கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்து கொண்டு தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கருத்துகளை பகிர உள்ளனர்.
தொகுதி மறுவரையறை நடவடிக்கைகள் தமிழகத்தின் அரசியல் பிரதிநிதித்துவம், நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கை மற்றும் மாநிலத்தின் எதிர்கால அரசியல் நிலை ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தக் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதற்கான அழைப்பிதழ்கள் புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் மூலம் தமிழகத்தை சேர்ந்த அனைத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.



